தூத்துக்குடி: `வனத்துறை கட்டடத்தில் பதுங்கியிருந்த ரௌடி!’ - காவலர் உயிரிழப்பில் புதிய தகவல்

தூத்துக்குடி மாவட்டம், மணக்கரைப் பகுதியில் பதுங்கியிருந்து காவலர்மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளி தங்கியிருந்த கட்டடம் வனத்துறைக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வெள்ளூர்ப் பகுதியைச் சேர்ந்த துரைமுத்து என்பவர்மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன. அதனால் அவரைப் பிடிக்க தூத்துக்குடி மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்திருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளி துரைமுத்துவைக் கைது செய்ய, டி.எஸ்.பி-யான வெங்கடேஷ் தலைமையில் ஐந்து பேர்கொண்ட தனிப்படையை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் அமைத்தார்.
தனிப்படை போலீஸாரின் பிடியில் சிக்காமல் துரைமுத்து தலைமறைவாக இருந்தார். அவரது இருப்பிடம் குறித்து போலீஸார் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், மணக்கரை பகுதியிலுள்ள மலைப்பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தலைமறைவாக இருந்திருக்கிறார்.

வனத்துறையினர் அந்தக் கட்டடத்தைக் கைவிட்டதால், அங்கு யாரும் செல்வதில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்டு அங்கு ஒரு கட்டில், சேர் ஆகியவற்றைக் கொண்டு சென்று நண்பர்களுடன் உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார் துரைமுத்து. வனப்பகுதியில் வேட்டையாடும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.
துரைமுத்து பதுங்கியிருக்கும் தகவலறிந்து சென்ற போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்தார். வெடிகுண்டுடன் கால் இடறி விழுந்தபோது குண்டு வெடித்ததில், துரைமுத்துவும் காயமடைந்து உயிரிழந்தாக போலீஸார் கூறினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதால் மாவட்டத்தின் அனைத்துக் காவல் நிலையங்களிலுமுள்ள போலீஸார் தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனால், குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது கூடுதல் போலீஸாரின் துணையுடன் தனிப்படையினர் செல்லவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.
சம்பவம் பற்றி அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான ஜெயகுமார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பேசிய அவர், ``துரைமுத்துமீது பல கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தலைமறைவாக இருந்த அவரைப் பிடிக்கச் சென்றபோது கொலையாளி நாட்டு வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.
குற்றவாளி வீசிய நாட்டு வெடிகுண்டு காவலர் சுப்பிரமணியனின் தலையில் விழுந்ததில் உயிரிழந்தார்.ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி
சம்பவ இடத்தில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் ஐந்து போலீஸார் மட்டுமே இருந்த நிலையில், அங்கு துரைமுத்துவுடன் அவருடைய கூட்டாளிகள் மூன்று பேரும் உடன் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அங்குள்ள கம்பிவேலியைத் தாண்டி ஓடியபோது காவலர் சுப்பிரமணியன் மட்டும் ரௌடிகளை விரட்டியபடி பின்தொடர்ந்துள்ளார். அதனால், ஆத்திரமடைந்து நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர். வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ள ரௌடிகளைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ரௌடிகள் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு கார், பைக், கட்டில், சேர் ஆகியவற்றுடன் வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தங்கியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
