Published:Updated:

`ஆசிட் பாட்டிலை இடமாற்றச் சொன்ன பள்ளி நிர்வாகம்!' - தூத்துக்குடி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

காயம்பட்ட மாணவர்
காயம்பட்ட மாணவர்

தூத்துக்குடி பள்ளியில் மாணவர்கள் ஆசிட்டை வேறு அறைக்கு மாற்றம் செய்தபோது, ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டதில் இரண்டு மாணவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் இடையர்காட்டில், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்குச் சொந்தமான அரசு உதவிபெறும் டி.டி.டி.ஏ குட் ஷெப்பர்டு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வுக்கூடத்தில் இருந்து ரசாயனக் கலவைக் குடுவைகளை வேறு இடத்தில் மாற்றி வைக்குமாறு 7-ம் வகுப்பு மாணவர்கள் சிலரிடம் கூறினாராம்.

தந்தையுடன் காயம்பட்ட மாணவர்
தந்தையுடன் காயம்பட்ட மாணவர்

குடுவைகளை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்ட வேல்ராஜ், மகாராஜன், முருகபெருமான், ஜெயமுருகன், பிரமோத் பால், வாசுராஜன் ஆகிய மாணவர்கள் வரிசையாக எடுத்துச் சென்று கொண்டிருந்தபோது, மகாராஜன், பிரமோத் பால் ஆகிய மாணவர்கள் தடுமாற, பிரமோத் பால் என்ற மாணவர் கையில் வைத்திருந்த குடுவை உடைந்து, மகாராஜன் மீது கொட்டியது. இதில், மகாராஜனின் இடது தோள்பட்டை, கை, கால் ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. மற்றொரு மாணவரான பிரமோத் பாலுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இரு மாணவர்களும் தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயம்பட்ட மாணவர்கள் கூறுகையில், ``கெமிஸ்ட்ரி லேப்பில் கறையான்கள் அதிகம் இருக்கு. ஸ்கூலுக்கு யாரோ விசிட் பண்ண வர்றாங்க. அதனால, லேப்பை சுத்தம் செய்யணும்.

காயம்பட்ட மாணவரிடம் விசாரணை
காயம்பட்ட மாணவரிடம் விசாரணை

அதுக்காகக் குடுவைகளை வேற இடத்துல மாத்தி வைக்கணும்னு க்ச்.எம் சார் சொன்னாங்க. அதனால, குடுவைகளை வேற இடத்துக்கு தூக்கிட்டுப் போனோம். எனக்குப் பின்னால வந்த பையன் தடுக்கி, என்னையும் தடுக்கிட்டான். இதுல, அவன் வச்சிருந்த குடுவை உடைஞ்சு என் மேல பட்டுடுச்சு. கை ரொம்ப காந்தலா இருந்துச்சு. வலி பொறுக்க முடியாம கத்திட்டோம்” என்றார்.

2008 ஆசிட் வீச்சு வழக்கில் 3 பேர்; 2019 டாக்டர் கொலையில் 4 பேர்!- `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' சஜ்ஜனார்

``பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்பினா, இப்படித்தான் வேலை செய்யச் சொல்லுவாங்களா. சின்ன பசங்களுக்கு இதுல இருக்குறது ஆசிட்… இது கை காலுல பட்டுட்டுன்னா பொத்துடும்னு தெரியுமா. லேபை க்ளீன் பண்ணணும்னா லேப் அசிஸ்டன்டை வச்சுதான க்ளீன் பண்ணச் சொல்லணும். 7-ம் கிளாஸ் ஸ்டூடண்ட்ஸுக்கு இதெல்லாம் தெரியுமா” எனக் கொந்தளித்தனர் மாணவர்களின் பெற்றோர்கள். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகெளரியிடம் பேசினோம்,

மாணவர்கள் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை
மாணவர்கள் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனை

``அந்த ஸ்கூல்ல நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய, தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் வசந்தா சென்றுள்ளார். இது தொடர்பாக அந்தப் பள்ளியின் தாளாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆய்வகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு