Published:Updated:

விழுப்புரம்: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்; 19,000 ரூபாய்! - சிக்கிய மருத்துவர் உள்ளிட்ட இருவர்

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் - இருவர் கைது
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் - இருவர் கைது ( தே.சிலம்பரசன் )

உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையியல் விற்க முயன்ற இருவர் விழுப்புரத்தில் பிடிபட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடைய உயிரைக் காக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது ரெம்டெசிவிர். இந்த மருந்துக்காக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருந்து கிடைக்கும் உரிய இடங்களில் காத்துக்கிடக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் இந்தச் சூழலில் இந்த மருந்தின் தேவை அதிக அளவில் அதிகரித்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் அவலநிலை சமீபகாலமாக நடந்தேறிவருகிறது. அதோடு போலியாகவும் மருந்துகள் விற்கப்பட்டுவருகின்றன என்பது வருத்தத்துக்கு உரிய ஒன்று. அந்த வரிசையில், அநிது ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பதற்காக வைத்திருந்த இரு நபர்கள் விழுப்புரத்தில் பிடிபட்டுள்ளனர். விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் கல்பனாவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் இந்த நபர்கள் பிடிபட்டுள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே மாருதி ஸ்விஃப்ட் வாகனத்தில் அமர்ந்திருந்த நபர்களிடம் விசாரித்து, காரை சோதனை செய்தபோது ஐந்து ரெம்டெசிவிர் மருந்துகள் பிடிபட்டுள்ளன.

மேலும் அந்த நபர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த விபவதேவர் (32) மற்றும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முத்துராமன் (22) என்பதும் தெரியவந்துள்ளது. செஞ்சி அருகேயுள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்திவரும் விபவதேவர், தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநராக இருக்கும் முத்துக்குமார் உதவியோடு உயிர்காக்கும் மருந்தாகக் கொடுக்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து ஒவ்வொன்றையும் 19,000 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்க முயன்றது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து ஐந்து ரெம்டெசிவிர் மருந்துகளைப் பறிமுதல் செய்த கல்பனா தலைமையிலான குழு, அந்த இரண்டு நபர்களையும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்லது.

இது தொடர்பாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் கல்பனாவிடம் பேசினோம். "எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று (05.05.2021) அந்த இரு நபர்களையும் கைதுசெய்தோம். விபவதேவர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். அதேபோல், முத்துராமன் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநராகப் பணி செய்துவருகிறார்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்
தே.சிலம்பரசன்

விபவதேவரிடம் விசாரித்தபோது, முத்துராமன் மூலமாகத்தான் ரெம்டெசிவிர் மருந்துகளைப் பெறுவதாகக் கைகாட்டினார். முத்துராமனிடம் விசாரித்தபோது, கோபிநாத் என்ற மருத்துவர் மூலமாக வாங்குவதாகக் கூறினார். அவருக்கு சென்னையிலிருந்து கிடைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதியும் அதிகாரம் எங்களிடம் இல்லை. அதனால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அந்த இரண்டு நபர்களையும், பிடிபட்ட ஐந்து ரெம்டெசிவிர் மருந்துகளையும் ஒப்படைத்துள்ளோம். காவல்துறையினர், கோபிநாத் எனும் நபரைப் பிடித்து விசாரணை நடத்தும் போதுதான் அந்த நபருக்கு எங்கிருந்து இந்த மருந்துகள் கிடைத்தன எனத் தெரியவரும். அந்த இரண்டு நபர்களிடம், தாலுகா காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். பிடிபட்ட உயிர்காக்கும் மருந்துகள் உரிய வழிமுறையைப் பின்பற்றி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்படும் நபர்களுக்கு பயன்படுத்தப்படும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு