Published:Updated:

'எந்த மூலையில் இருந்தாலும் சாவுதான்!' - திருப்பூர் சாதனைத் தமிழருக்கு வந்த மிரட்டல் கடிதம்

தண்ணீரில் இயங்கும் சூப்பர் சானிக் இன்ஜினைக் கண்டுபிடித்த தமிழருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செளந்தரராஜன் குமாரசாமி
செளந்தரராஜன் குமாரசாமி

பெருகிவரும் வாகனங்களால் காற்று மாசு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் விலையும் சாமான்யர்களை வதைத்துவருகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்ந்தரும் விதமாக, முழுக்க முழுக்க தண்ணீரில் இயங்கக்கூடிய `சூப்பர் சானிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிஸியன்ஸி' என்ற இன்ஜினைக் கண்டுபிடித்தார், ஒரு தமிழர்.

செளந்திரராஜன் குமாரசாமி
செளந்திரராஜன் குமாரசாமி

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள புள்ள செல்லிபாளையம் என்ற குக்கிராமத்தில் பிறந்த செளந்தரராஜன் குமாரசாமி தான் அந்த கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர்.

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு, ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடிய தன்மையைக் கொண்டதுதான், இந்த இன்ஜினின் தனித்துவம். தனது சொந்த வாழ்வில் பல விஷயங்களைத் தியாகம் செய்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இன்ஜினைக் கண்டுபிடித்திருக்கிறார், சௌந்தரராஜன் குமாரசாமி.

சூப்பர் சானிக் இயந்திரம்
சூப்பர் சானிக் இயந்திரம்

இப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பை சொந்த நாட்டிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் குமாரசாமியின் ஆசை.

ஆனால், பல்வேறு முயற்சிகள் செய்தும் இந்தியாவில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த இன்ஜினின் மகத்துவத்தைத் தெரிந்துகொண்ட ஜப்பான், அதைத் தங்கள் நாட்டில் அறிமுகப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் பறந்து கொண்டிருக்கிறார் குமாரசாமி.

கண்டுபிடிப்பு
கண்டுபிடிப்பு

இந்நிலையில், ‘இந்த திட்டத்தைத் தொடர்ந்தால், கொலை செய்துவிடுவோம்’ என்று செளந்தரராஜன் குமாரசாமி வீட்டுக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சௌந்தரராஜன் குமாரசாமி, “ சூப்பர் சானிக் இன்ஜின் ஜப்பானில் விரைவில் அறிமுகமாக உள்ளது. டோக்கியோவிலிருந்து பத்து நாள்களுக்கு முன்புதான் தமிழகம் திரும்பியிருந்தேன். கடந்த சனிக்கிழமை அதிகாலை, ‘இந்த திட்டத்தை உலகின் எந்த மூலையில் தொடர்ந்தாலும் உன்னைக் கொலை செய்துவிடுவோம் (If you continued the project further anywhere in the world, we will definitely kill you)’ என எழுதப்பட்டிருந்த கடிதத்தை மர்ம நபர்கள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.

மிரட்டல் கடிதம்
மிரட்டல் கடிதம்

கடிதம் வீசப்பட்டதைக் கண்டு நாய் குலைத்த பிறகுதான், இந்த விஷயம் எனக்குத் தெரிந்தது. இதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.

ஆனால், ஏற்கெனவே கடந்த 2010-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தபோது, இதேபோல ஒரு மிரட்டல் கடிதம் லஷ்கர் இ தொய்பாவிடமிருந்து வந்திருந்தது. எனவே, இதை அலட்சியமாகப் பார்க்க வேண்டாமென்று உறவினர்கள், நண்பர்கள் கூறினார்கள். எனவே, மேற்கு மண்டல ஐ.ஜி-யிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

செளந்திரராஜன் குமாரசாமி
செளந்திரராஜன் குமாரசாமி

இதன் பின்னணியில், ஆயில் மாஃபியாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. ஆய்வுப் பணிகளுக்கு நல்ல தெளிவான மனநிலை வேண்டும். தற்போது அந்த மனநிலை, இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பிரதமரிடமும் ஜப்பான் அரசிடமும் முறையிட உள்ளேன்” என்றார் அமைதியாக.