Published:Updated:

`நம்ம சென்னை’ செயலியில் புகாரளித்த பெண்ணுக்கு மிரட்டல்! - என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

சென்னை மாநகராட்சி- ரிப்பன் பில்டிங்

`நம்ம சென்னை’ செயலியில் புகார் தெரிவித்த பெண்ணை மாநகராட்சி ஊழியர் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`நம்ம சென்னை’ செயலியில் புகாரளித்த பெண்ணுக்கு மிரட்டல்! - என்ன நடக்கிறது சென்னை மாநகராட்சியில்?

`நம்ம சென்னை’ செயலியில் புகார் தெரிவித்த பெண்ணை மாநகராட்சி ஊழியர் ஒருவர் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
சென்னை மாநகராட்சி- ரிப்பன் பில்டிங்

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. மக்கள்தொகை கிட்டத்தட்ட ஒரு கோடி. சென்னை மாநகர மக்கள் தெருவிளக்குப் பராமரிப்பு, குப்பையை அகற்றுதல், நாய்-கொசுத் தொல்லை, சாலைப் பராமரிப்புப் பணிகள், மழைநீர் கால்வாய் பராமரிப்பு என மாநகராட்சி மூலம் தீர்க்கப்படவேண்டிய பல பிரச்னைகள் பற்றியும் புகார் செய்ய `நம்ம சென்னை’ என்ற செயலி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செயலி மூலம் புகார் தெரிவித்தால், அந்தப் புகார், அந்தப் பகுதிக்குட்பட்ட மாநகராட்சி கீழ்நிலை அலுவலகர் முதல் ரிப்பன் பில்டிங் தலைமை அலுவலகம் வரை வந்து சேரும்.

நம்ம சென்னை செயலி
நம்ம சென்னை செயலி

பொதுமக்கள் கொடுத்துள்ள புகார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அந்தப் புகாரின் நிலவரம் என்ன என்பதைத் தலைமை அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்கும். இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தபோது சென்னை மாநகர மக்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்பட்டது. திட்டம் கொண்டுவந்த பிறகு ஒவ்வோர் ஆண்டும், வரும் குறைகளைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்து நன்றாகச் செயல்படுத்தப்பட்டுவந்தது. பெரும்பாலும் ஒரு புகார் வந்தால், 24-48 மணி நேரத்தில் அந்தப் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் மாநகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தவரைத் தொடர்புகொண்டு தகுந்த காரணத்தைக் கூறுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தச் செயலி கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. மேலும், சென்னையில் இந்தச் செயலி கொண்டுவந்த நேரத்தில் மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர்கள் பதவி காலியாக இருந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், சென்னை முகலிவாக்கம் பகுதியில் வசிக்கும் ப்ரீத்தி ராமதாஸ் என்பவர், `நம்ம சென்னை’ செயலியில் ஒரு புகார் தெரிவித்திருந்தார். அந்தப் புகாரில், ``மழைநீர் வடிகாலில் கழிவுநீர் விடப்படுகிறது. அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், ``மாநகராட்சியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள், அவர் வீட்டுக்கு வந்து `எதற்காகச் செயலியில் புகார் தெரிவித்தீர்கள்... எது என்றாலும் எங்களிடம் சொல்லுங்கள்’ என்று மிரட்டிச் சென்றதாக" தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். மேலும், இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது பகுதியில் கொசுத் தொல்லை இருப்பதாகப் புகார் தெரிவித்தபோதும் இதேபோல மாநகராட்சி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறியிருந்தார். புகார் தெரிவித்தவர் மிரட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி 12-வது மண்டல அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசினோம். ``புகார் அளித்தவர் மிரட்டப்பட்டாரா என்று துறைசார் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்த மழைநீர் வடிகாலில் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. எங்களுக்கு அழைப்பு, மெயில், செயலி என்று எந்த வகையில் புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்று தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``மிரட்டப்பட்டதாகப் புகார் வந்ததுமே விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவம் இனி ஒரு முறைகூட நடக்கக் கூடாது என்று அனைத்து மண்டல அலுவலகர்களுக்கும் அழுத்தமாக அறிவுறுத்தியுள்ளோம். `நம்ம சென்னை’ செயலியில் வரும் புகார்கள் விசாரிக்கப்படுகின்றனவா, அந்தப் புகார்களுக்கு என்ன தீர்வு காணப்படுகிறது, புகாரின் நிலை என்ன என்பதைத் தலைமை அலுவலகம் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. கண்டிப்பாகச் செயலியில் புகார் தெரிவிக்கும் பொதுமக்களின் பிரச்னை விரைந்து தீர்வுகாணப்படுவது உறுதிசெய்யப்படும்" என்று பேசினார்.

சென்னைவாழ் பொதுமக்களுக்கு `நம்ம சென்னை’ செயலி ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இப்போது, புகார் தெரிவித்தால் யாரவது மிரட்டுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது போன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாது என்பதை உறுதி செய்யவேண்டியது மாநகராட்சியின் கடமை.