திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பொங்குபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், டிசம்பர் மாதம் 15-ம் தேதி செல்போன் செயலி ஒன்றின் மூலம் ரூ.3,000 கடன் பெற்றிருக்கிறார். அதைத் திருப்பிச் செலுத்திய பிறகு, அவருக்குக் கூடுதலாகக் கடன் தருவதாக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதையடுத்து, டிசம்பர் மாதம் 28-ம் தேதி, நான்கு செல்போன் செயலிகள் மூலம் அந்தப் பெண் ரூ.15,000 கடன் பெற்றிருக்கிறார். தவணைக்காலம் முடியும் முன்னரே பணத்தைத் திருப்பிச் செலுத்தக் கூறி அந்தப் பெண்ணுக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

மேலும், தவறும்பட்சத்தில் கடன் செயலிக்கு அந்தப் பெண் அளித்த புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து இணையத்திலும், செல்போனிலுள்ள உறவினர்களின் வாட்ஸ்அப் எண்களுக்கும் அனுப்பிவிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். அதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைதுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் செய்தியாளர்களிடம், ``அந்தப் பெண் கடன்பெற்ற Speed Loan, Easy Loan செயலிகள் நைஜீரியாவிலும், Candy Pay செயலி இந்தோனேசியாவிலும், Lucky Money சீனாவிலிருந்தும் இயங்கிவந்தது தெரியவந்தது. ஆனால், அந்தப் பெண்ணுக்கு வந்த செல்போன் அழைப்புகளின் டவர் காதர்பேட்டை பகுதியிலிருந்து இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி தலைமையில் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் சித்ராதேவி உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில், காதர்பேட்டை பகுதியில் கால்சென்டரிலிருந்த கேரள மாநிலம், கோழிக்கோடு மடவூரைச் சேர்ந்த முகமது அங்கர் (24), கொடுயாளியைச் சேர்ந்த முகமது ஷஃபி (35), கோட்டக்கல்லைச் சேர்ந்த முகமது சண் (37), மலப்புரத்தைச் சேர்ந்த அனீஷ் மோ (33), அஸ்ரப் (46) ஆகிய ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலிருக்கும் செயலி நிறுவனங்களிடமிருந்து மாதத்துக்கு ரூ.4,00,000 வரை கமிஷன் பெற்றுக்கொண்டு, கடன் பெற்றவர்களை மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கின்றனர். கொடுத்த பணத்தைவிட அதிகமாகப் பணம் கேட்டு வெவ்வேறு செல்போன் எண்களிலிருந்து அழைத்து மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுக்க மறுக்கும்பட்சத்தில், செயலிமூலம் ஏற்கெனவே பெறப்பட்ட புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரித்து உறவினர்களுக்கும் இணையத்திலும் வெளியிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். நாளொன்றுக்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள 3,500-க்கும் மேற்பட்டோரிடம் மிரட்டிப் பணம் பறித்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 500 சிம்கார்டுகள், 30-க்கும் மேற்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகள், 11 சிம்கார்டு பாக்ஸ்கள், ஆறு மோடங்கள், மூன்று மடிக்கணினிகள், ஒரு யூ.பி.எஸ், ஒரு பேட்டரி ஆகியவை கைப்பற்றப்பட்டன. தங்களுடைய அடையாளத்தை மறைக்க Itel மற்றும் VOS VOIP ஆகிய செயலிகளை இவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது" என்று தெரிவித்தார்.