கட்டுரைகள்
Published:Updated:

நாட்டு வெடிகுண்டு... பழிக்குப் பழி திட்டம்...போலீஸில் சிக்கியது எப்படி?

நாட்டு வெடிகுண்டு
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டு வெடிகுண்டு

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பீடி தினேஷின் நண்பரான குமார் என்ற குள்ள குமார் ஒரு ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழகத்தில் வெடிகுண்டு பீதி இப்போதைக்கு ஓயாது போல... கோவையை கேஸ் சிலிண்டர் குண்டு கதிகலங்க வைத்த நிலையில், சென்னை அருகே மூன்று ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இப்போது, நாட்டு வெடிகுண்டுடன் சிலரைக் கைது செய்திருக்கிறது சென்னை போலீஸ். என்ன நடந்தது?

நவம்பர் 02-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் குளக்கரைத் தெருவில் சிலர் ஆயுதங்களுடன் நின்றிருந்ததைப் பார்த்த ஏரியா மக்கள், ஏதோ பெரிய அசம்பாவிதம் நிகழவிருப்பதை உணர்ந்து உடனடியாக நுங்கம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்த, ஆயுதங்களுடன் நின்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அதில் ஒருவன் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கத்தியால் குத்த முயன்றுள்ளான். போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றும் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டது.

நாட்டு வெடிகுண்டு... பழிக்குப் பழி திட்டம்...போலீஸில் சிக்கியது எப்படி?

சுற்றி வளைத்த போலீஸ்

இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களைத் தேடினர். அந்தப் பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸாருக்கு, தாக்குதலில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற பீடி தினேஷ் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடியது.

தப்பியோடிய குற்றவாளிகள் போரூர், பாரதியார் தெருவில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டைச் சுற்றிவளைத்த போலீஸார் அங்கிருந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். வீட்டைச் சோதனை செய்ததில், ஐந்து நாட்டு வெடிகுண்டுகள், கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் பல கத்திகளை போலீஸார் கைப்பற்றினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில், தினேஷ் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கஞ்சா, வழிப்பறி உட்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. மேலும், முகமது அஜிம் என்பவர்மீதும் கஞ்சா வழக்கு நிலுவையிலிருக்கிறது.

நாட்டு வெடிகுண்டு... பழிக்குப் பழி திட்டம்...போலீஸில் சிக்கியது எப்படி?

நண்பன் கொலைக்கு பழிவாங்கத் திட்டம்...

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பீடி தினேஷின் நண்பரான குமார் என்ற குள்ள குமார் ஒரு ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தனசேகர், பார்த்திபன் ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள். தன் நண்பனின் கொலைக்குப் பழிதீர்ப்பதற்காக, தன் கூட்டாளிகளுடன் போரூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி, திட்டம் தீட்டியிருக்கிறார் தினேஷ். இதற்காக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கிப் பதுக்கி வைத்திருந்துள்ளனர்.

முகமது அஜிம், தினேஷ்
முகமது அஜிம், தினேஷ்

தினேஷ் கும்பலுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த அந்த நபர் குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. வெடிகுண்டு சர்வசாதாரணமாக குற்றவாளிகளுக்குக் கிடைத்திருப்பது போலீஸாரையே உலுக்கியெடுத்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்கள்மீது வெடிபொருள் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருந்தாலும், வெடிகுண்டு வந்த வழியை போலீஸ் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதுபோல, சென்னையில் வேறு யாருக்காவது சப்ளை செய்திருக்கிறார்களா? வெடிகுண்டு சென்னையில் தயாரிக்கப்படுகிறதா, அல்லது வெளியிலிருந்து கொண்டு வரப்படுகிறதா என்பதையெல்லாம் போலீஸ் கண்டறிந்தால் மட்டும், ஒரு பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்னதாக அதைத் தடுக்க முடியும். வேகம் காட்டுமா போலீஸ்?