Published:Updated:

பெற்றோரை இழந்த சிறுமி; போதை ஆசாமிகள்- வாணியம்பாடி இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

வாணியம்பாடி அருகே 12 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமிக்குப் பெற்றோர் இல்லை. உறவினர் ஒருவரின் அரவணைப்பில் உள்ளார். அந்த உறவினர் சாராய வியாபாரி என்று கூறப்படுகிறது. இதனால், சிறுமிக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கவில்லை.

கைதான  சந்துரு
கைதான சந்துரு

வீட்டில் கழிவறை வசதி இல்லாத காரணத்தினால், அங்குள்ள பாலாற்றுப் பகுதிக்குச் செல்வதைச் சிறுமி வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த 6-ம் தேதி இரவு 7 மணியளவில், பாலாற்றுப் பகுதிக்குத் தனியாகச் சென்ற சிறுமியை அங்கு மது குடித்துக்கொண்டிருந்த சந்துரு (24), பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய மூன்று பேர் பின்தொடர்ந்து சென்றனர்.

இந்த இளைஞர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். ‘சிறுமிக்குப் பெற்றோர் இல்லை. என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை’ என்ற வக்கிர புத்தியில் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து சத்தம் போடக் கூடாதென்று மிரட்டியிருக்கிறார்கள்.

கைதான கண்ணன்
கைதான கண்ணன்

பின்னர், அங்குள்ள சுடுகாட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று மூன்று பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைப்பற்றி வெளியில் சொன்னால் ‘கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து சாவகாசமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஆடை கிழித்தெறியப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுமி விவரிக்க முடியாத துயரத்தில் உறைந்து போனார்.

அதையடுத்து, பிணம் புதைக்கப்பட்ட இடத்தில் கிடந்த உடைகளை எடுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடிய சிறுமி, உறவினர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறினார். இதுகுறித்து, வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்தனர்.

கைதான பார்த்திபன்
கைதான பார்த்திபன்

இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்கள் மீது கடத்தல், கொலை முயற்சி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம், வாணியம்பாடி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு