Published:Updated:

கிராம மக்களின் சாதுர்யம்! - ஊட்டி அருகே ஆயுதங்களுடன் வேட்டையாட வந்த கும்பல் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Poachers
Poachers

நீலகிாி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள இடுகொரை கிராம பகுதியில் இரவு நேரத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. வெடிச்சத்தத்தைக் கேட்டு இடுகொரை கிராம மக்கள் சிலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார் ஒன்று அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதைக் கண்டனர்.

seized poachers car
seized poachers car

உடனே சுதாரித்துக்கொண்ட ஊர்மக்கள், அந்தச் சமயத்தில் பணிக்குச் சென்று தங்களது கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் திரும்பும் ஊர்மக்களிடம் போனில் தொடர்புகொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு காரில் வருகின்றனர், வழியில் அவர்களது காரை வழிமறித்து பஸ்சை நிறுத்தி அவர்களை விசாரிக்குமாறு தகவல் அளித்தனர். இடுகொரை கிராமத்திலிருந்து குறுகிய சாலையில் கோத்தகிரி நோக்கி சந்தேகத்திற்கிடமான கார் வந்துகொண்டிருந்தபோது அரசுப் பேருந்தை காருக்கு எதிரே செல்ல முடியாத வகையில் ஓட்டுநர் நிறுத்தினார்.

காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர்கள் காரிலிருந்து அருகிலுள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடினர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவர்கள் வந்த காரை சோதனையிட்டுப் பார்த்தபோது 2 வீச்சரிவாள், 3 நாட்டு வெடிகுண்டுகள், மண்ணெண்ணெய், டார்ச் லைட் உள்ளிட்டவை காருக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

seized poachers weapons
seized poachers weapons

கார் மற்றும் ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர் அவற்றை கோத்தகிரி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்ததுடன், காரின் உரிமையாளர் யார், காரில் வந்து தப்பி ஓடிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். மேலும், ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் இடுகொரை பகுதிக்குச் செல்ல வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில், கார் மற்றும் அதிலிருந்த பொருள்களை விட்டுவிட்டு தப்பி ஓடியநிலையில், நேற்று மாலை 3 பேர் கோத்தகிரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் கூறுகையில், ``காரில் வந்தவர்கள் வனவிலங்கு வேட்டைக் கும்பலாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால், அவர்கள் மூன்று பேரையும் வனத்துறை வசம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.

Kothagiri Police station
Kothagiri Police station

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ``அணில்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் (46), மஞ்சக்கம்பை பகுதியைச் சேர்ந்த மருது (25), பக்காசூரன் மலைப்பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (26) ஆகிய மூவரும் வனவிலங்குகளை வேட்டையாட ஆயுதங்களுடன் இரவு நேரத்தில் காரில் வந்துள்ளனர். மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம். விசாரணையின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்" என்றனர்.