Published:Updated:

நெல்லை: பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை... கைதான மூவர்!

பாலியல் தொல்லை
News
பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

பள்ளி தாளாளர் அடிக்கடி மாணவிகளைத் தன் அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதைத் தலைமை ஆசிரியையிடம் தெரிவித்த மாணவிகளை ஃபெயிலாக்கி விடுவதாக மிரட்டி அனுப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

Published:Updated:

நெல்லை: பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர்; உடந்தையாக இருந்த தலைமை ஆசிரியை... கைதான மூவர்!

பள்ளி தாளாளர் அடிக்கடி மாணவிகளைத் தன் அறைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதைத் தலைமை ஆசிரியையிடம் தெரிவித்த மாணவிகளை ஃபெயிலாக்கி விடுவதாக மிரட்டி அனுப்பியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

பாலியல் தொல்லை
News
பாலியல் தொல்லை ( மாதிரி படம் )

பள்ளிகளில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தேறி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெல்லையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்குப் பள்ளியின் தாளாளரே பாலியல் தொல்லை கொடுத்ததும் அதற்குத் துணையாக அவரின் மனைவியும் பள்ளித் தலைமை ஆசிரியையும் இருந்தது தெரியவந்திருக்கிறது.

பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம்
பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம்

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டுவருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள அந்தப் பள்ளியில் 900 மாணவிகள் படித்துவருகிறார்கள். பள்ளியின் தாளாளராக குதுபுதீன் நஜீம் (47) என்பவர் இருக்கிறார். பள்ளியில் தலைமை ஆசிரியையாக காதரம்மாள் பீவி (57) பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீம், தனது அறைக்கு மாணவிகளை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பு வழக்கம்போல குதுபுதீன் நஜீம் தனது அறைக்கு மூன்று மாணவிகளை அழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அச்சம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததுடன், நடந்த விவரங்களை சக மாணவிகளிடம் சொல்லி அழுதிருக்கின்றனர். அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், பள்ளிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிக்குள் போராடிய மாணவிகள்
பள்ளிக்குள் போராடிய மாணவிகள்

தகவலறிந்து வந்த பெற்றோர், இஸ்லாமிய அமைப்பினரும் மாணவிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு சென்ற மேலப்பாளையம் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து அமைதியை ஏற்படுத்தினர்,

இந்த நிலையில், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, போலீஸார் மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில் பள்ளித் தாளாளர் குதுபுதீன் நஜீம், மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டது.

பள்ளி வளாகத்தில், பரிதவிப்பில் பெற்றோர்
பள்ளி வளாகத்தில், பரிதவிப்பில் பெற்றோர்

இது தொடர்பாக மாணவிகள் சிலர் ஏற்கெனவே பள்ளித் தலைமையாசிரியை காதரம்மாள் பீவியிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர். அவரும் தாளாளரின் மனைவி முகைதீன் பாத்திமா ஆகியோர், தாளாளர்மீது புகார் தெரிவித்த மாணவிகளை அழைத்து பாடங்களில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியிருக்கின்றனர். இவை அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனால் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தாளாளர் உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தில் கைதுசெய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.