Published:Updated:

`கந்துவட்டி கொடுமை.. நின்றுபோன காதல் திருமணம்’- அவமானத்தால் தற்கொலை செய்த பெற்றோர்; மகன் கவலைக்கிடம்

கந்துவட்டி கொடுமை
கந்துவட்டி கொடுமை

கடன் கொடுத்த ஒருவர் வீட்டை எழுதி வாங்கிக்கொண்டார். மற்றொருவர் வீட்டிலிருந்த கார், பைக், உள்ளிட்ட பொருள்களை அள்ளிச் சென்றார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (52). அவரின் மனைவி லட்சுமி (47). இவர்களுக்கு ஆரோக்கியம் (வயது 25) என்ற மகனும் ஜோதி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். சந்தானத்தின் மனைவி லட்சுமிக்கு பொட்டல்புதூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்ததால் குடும்பத்துடன் ஆம்பூரில் வசித்து வந்தார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்.... நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு..! இன்றைய நிலை என்ன?

சந்தானம், மசாலா பவுடர் மற்றும் சாக்லேட் ஆகியவற்றுக்கு டீலர்ஷிப் எடுத்து சொந்தமாக பிசினஸ் செய்து வந்தார். பொறியியல் பட்டதாரியான அவரின் மகன் ஆரோக்கியம் தனியார் கான்ட்ராக்ட் தொழில் செய்ததுடன் ஷேர் மார்க்கெட்டிங் தொழிலிலும் முதலீடு செய்திருக்கிறார்.

மகனின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கந்து வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார்கள். அதைத் திருப்பிக்கொடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், சில வாரங்களுக்கு முன்பு 7 லட்சம் கடன் கொடுத்த ஒருவர் வட்டியுடன் 27 லட்சம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வீட்டை எழுதி வாங்கியிருக்கிறார்.

image
image

கடன் கொடுத்த மற்றவர்களும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்திருக்கிறார்கள். அதற்காகச் சொத்துகளை விற்பனை செய்யலாம் என நினைத்தபோது அதை தங்களுக்கே எழுதிக் கொடுக்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர். பொங்கல் தினத்தில் கடன் கொடுத்த ஒருவர் வீட்டில் இருந்த கார், பைக், கம்யூட்டர் உள்ளிட்டவற்றை வாரிச் சுருட்டிச் சென்றதுடன் அவதூறாகப் பேசியுள்ளார்.

சந்தானத்தின் மகன் ஆரோக்கியம் ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணையே இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகள் நடந்திருக்கிறது. இந்த நிலையில், கந்துவட்டி கும்பலின் தொல்லை பற்றி அறிந்த பெண் வீட்டார், திருமணத்துக்கான ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளனர்.

`கந்துவட்டி கடனுக்காக அடிச்சே கொன்னுட்டாங்க!' - ஆட்சியரிடம் கலங்கிய ஏரல் இளைஞரின் உறவினர்கள்

கந்துவட்டி கும்பலின் தொல்லை ஒருபக்கம், மகனின் திருமண ஏற்பாடுகள் நின்றுபோன அவமானம் மறுபக்கம் என ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மனம் நொந்து போயிருக்கிறார்கள். அதனால் தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் விவசாயப் பணிகளுக்குப் பயன்படும் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தானம் மற்றும் லட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆரோக்கியம் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லூரியில் பயிலும் மகள் ஜோதிக்கு மட்டும் விஷம் கொடுக்காததால் அவர் உயிர் தப்பினார்.

representational image
representational image

குடும்பத்தின் நிலையை எண்ணிக் கலங்கி நிற்கும் அவரைத் தேற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதனால் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு