Published:Updated:

``120 பேர்... 2 கிராம்... கொஞ்சம் கூடினாலும் மரணம்!” - கேரளாவை மிரட்டிய `போதை' மாணவன்

பிரேம் குமார் எஸ்.கே.

கேரளாவில் பணக்காரர்கள், பிரபலங்கள் தொடங்கி பலநிலைகளில் போதைப் பொருள்கள் சப்ளை தாராளமாக நடக்கிறது என்கிறார்கள்.

போதைப் பொருள் கடத்திய ஷெபி
போதைப் பொருள் கடத்திய ஷெபி ( mathrubhumi )

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் கடத்தும் நெட் வொர்க் கடந்த சில வருடங்களாகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்கிறார்கள் காவல்துறையினர். பல நேரங்களில் சோதனைகளின்போது போதைப் பொருள்கள் சிக்கினாலும், பல நேரங்களில் இந்தக் கடத்தல் தாராளமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

போதை பொருள்கள்
போதை பொருள்கள்

பல பிரபலங்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தப் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. போதைப் பொருள்களிலும் புதிது புதிதாகக் கொண்டுவந்துகொண்டே இருக்கிறார்கள், சட்டவிரோதமாகப் போதைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள்.

கேரளாவில் தற்போது எம்.டி.எம்.ஏ என்னும் போதை பொருள் அதிகம் புழக்கத்தில் இருந்து வருவதாகக் காவல்துறைக்கு அவ்வப்போது தகவல்கள் வந்துள்ளன. அப்படித்தான் கலால் பிரிவினருக்கு ஒரு தகவல் வந்தது. அந்தத் தகவலைக் கொண்டு வந்தவர் ஒரு இளைஞர்.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்

அவர் ஷெபி என்ற மாணவர் பெங்களூருவில் இருந்து போதை பொருள்களைக் கடத்தி வருவதாகக் தகவல் கொடுத்தார். அத்துடன் கலால் அதிகாரிகள் தகவல் கொடுத்த இளைஞர் மூலம் ஷெபி இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்தனர்.

இதன் மூலம் ஷெபி எங்கு எப்படி வருகிறார், எங்கு வந்துகொண்டு இருக்கிறார் போன்ற தகவல்களைப் பெற்றனர். இறுதியாக திருச்சூர் வந்த ஷெபியை மன்னுதி என்னும் இடத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 கிராம் அளவில் எம்.டி.எம்.ஏ என்னும் போதைப் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது - Representation image
கைது - Representation image

இரண்டு கிராமுக்குதான் இத்தனை பிளானா என்று நினைக்கிறீர்களா? ஆம், இந்தப் பவுடர் ஒருகிராம் 5,000 ரூபாய். பொதுவாக பார்ட்டிகளில் இந்த வகை போதைப் பவுடர்கள் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சிறிய அளவிலே இந்தப் போதைப் பொருளைப் பயன்படுத்த வேண்டுமாம். அதாவது 2 கிராம் போதைப் பொருளைக் கொண்டு 120 பேருக்குப் போதை ஏற்றலாம் என்கிறார்கள்.

அளவு கொஞ்சம் கூடினாலும் மரணம் நிச்சயம். ஒரு கிராமில் சிறு பங்கை ரூ.500 என்று விற்கிறார்கள். அதாவது ஒரு கிராமில் 10-ல் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் விற்கப்படுகிறது. இதை ஒருவர் எடுத்துக்கொண்டால், அதன் தாக்கம் 45 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பிக்குமாம். ஆனால் அதன் பின்னர் 6 முதல் 9 மணி நேரம் வரை தன்னிலை மறந்து போதையில் இருப்பார்களாம்.

போதை பொருள்கள்
போதை பொருள்கள்

இது பெரும்பாலும் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், குளிர்பானத்தில் கலந்து பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் இந்தப் பவுடர் மூலம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றனர் காவலர்கள். இது போன்ற பவுடர்களின் புழக்கம் தற்போது தென்னிந்தியாவில் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திரிச்சூரில் இந்தப் பவுடர் மூன்றாவது முறையாக இப்போது கைப்பற்றப்பட்டுள்ளது. இது எங்கிருந்து வருகிறது என்பது தொடர்பாக அதிகாரிகள் ஷெபியிடம் விசாரித்தனர். அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பெஞ்சமில் புரோணோ என்பவரிடம் இருந்து பெற்றதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விசாரணையை அதிகாரிகள் துரிதபடுத்தியுள்ளனர்.