நேற்று இரவு, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்திலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழாவுக்குச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், சதீஷ் என்ற டிக்கெட் பரிசோதகர் பணியிலிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில், அரக்கோணம் அருகே ரயில் வந்தபோது, எஸ்-6 பெட்டியில் சந்தேகத்துக்கிடமாக இருந்த சிலரின் பைகளை சதீஷ் சோதனை செய்தார். அப்போது, 12 பண்டல்களில் கஞ்சா பதுக்கிக் கடத்தப்படுவதை அவர் கண்டுபிடித்தார். இது குறித்து உடனடியாக தனது உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அரக்கோணத்தைக் கடந்து ரயில் காட்பாடியை நோக்கி வருவதற்குள் கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர் தப்பி ஓடிவிட்டனர்.

மீதமிருந்த மூன்று பேரைப் போராடி மடக்கிப் பிடித்த டிக்கெட் பரிசோதகர் சதீஷ், அவர்களை காட்பாடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார். அதையடுத்து, பன்னிரண்டு பண்டல்களில் இருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட சந்தரகண்ணா, சுனில்த்வான், மனோஜ்திஸ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்தனர். இவர்கள் மூன்று பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பி ஓடிய மேலும் இரண்டு பேரையும் தேடிவரும் போலீஸார், கஞ்சா எங்கிருந்து எங்கு கடத்தப்பட்டத, பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யார் இருக்கின்றனர் என்பது குறித்து தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.
