Published:Updated:

லைக்ஸ்க்காக விபரீத டிக்டாக் வீடியோ... பதறிய உறவினர்கள்! - புதுக்கோட்டை கலாட்டா

ரியாஸ் பதிவு செய்த வீடியோ
ரியாஸ் பதிவு செய்த வீடியோ

பகுர்லாவின் புகைப்படத்தில் `கண்ணீர் அஞ்சலி' `இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்' என எழுதியதுடன், `எள்ளுவய பூக்கலியே' என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.

சமீபகாலமாகவே டிக்டாக் மோகம், இளம் தலைமுறையினர் மட்டுமன்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் ஆட்டிப்படைக்கிறது. குறிப்பாக, லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பலரும் ரிஸ்க்கான வீடியோக்களையும் விபரீதமான வீடியோக்களையும் எடுத்து சிக்கிக்கொள்கின்றனர்.

கடந்த வாரம் புதுக்கோட்டை அருகே கருக்காக்குறிச்சியைச் சேர்ந்த கண்ணன் என்ற கல்லூரி மாணவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் டிக்டாக் வீடியோ செய்ததால், போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மற்றுமொரு கூத்து நடைபெற்றுள்ளது.

ரியாஸ் பதிவு செய்த வீடியோ
ரியாஸ் பதிவு செய்த வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ், பகுர்லா ஆகிய இருவரும் நண்பர்கள். நண்பர்களான இவர்கள் இருவரும் இணைந்து டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றி வந்தனர். இருவரும் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமாக வீடியோவில் தோன்றுவதால், இவர்களுக்கென குறிப்பிட்ட பார்வையாளர்களும் இருந்துள்ளனர். பகுர்லா சிறிது நாள் டிக்டாக் பயன்படுத்தவில்லை என்றும், கடந்த சில தினங்களாக இருவரும் சேர்ந்து டிக்டாக் பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தனியாக அதிகளவில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்று ரியாஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன் நண்பனான பகுர்லா இறந்துவிட்டதாக எடிட் செய்து டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பகுர்லாவின் புகைப்படத்தில் `கண்ணீர் அஞ்சலி' `இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார்' என எழுதியதுடன், `எள்ளுவய பூக்கலியே' என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். மேலும், சில சோக வீடியோக்களையும் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

ரியாஸ் பதிவு செய்த வீடியோ
ரியாஸ் பதிவு செய்த வீடியோ

இந்த வீடியோ டிக்டாக் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவவே உண்மையில் பகுர்லா இறந்துவிட்டதாக எண்ணி வீட்டிற்கே உறவினர்கள் பலரும் துக்கம் விசாரிக்க வந்துவிட்டனர். பர்குலாவின் குடும்பத்தினருக்கோ அதிர்ச்சி. இதுவொருபுறம் என்றால், பர்குலா இறப்பு குறித்து செல்போனில் துக்கம் விசாரிக்க அழைப்பு விடுத்த உறவினர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், அந்த அழைப்பை எடுத்ததே பர்குலாதான். அதன்பிறகுதான் இதுபற்றி பர்குலாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, தற்போது தான் உயிருடன் இருப்பதாகவும், ரியாஸ் வீணாக வதந்தி பரப்பி இருப்பதாகவும் பேசி பர்குலா வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதற்கு டிக்டாக் பிரியர்கள் பலருமே இவர்களுக்கு எதிராகப் பொங்கி எழுந்துள்ளனர். ``உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாடா, லைக்ஸ்க்காக நல்லா இருக்க மனுஷன் செத்துப்போயிட்டாருன்னு சொல்லுவீங்களான்னு கமென்ட் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பகுர்லா கூறும்போது, ``எனக்குத் தெரியாமல் நான் இறந்துவிட்டதாக அவர் பதிவிட்டிருக்கிறார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரைக் கைதுசெய்ய வேண்டும். மேலும், அவரது டிக்டாக் ஐடியைத் தடை செய்ய வேண்டும்’ என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்.

ரியாஸ் மற்றும் பர்குலா
ரியாஸ் மற்றும் பர்குலா

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ``சமீப காலமாகவே டிக்டாக் செயலி அனைவரையும் அடிமையாக்கிவிட்டது. டிக்டாக் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பொதுமக்களை அச்சுறுத்துவது, அவதூறுகளையும் வதந்திகளையும் பரப்புவது என முற்றிலும் தவறான நோக்கத்துக்காவே டிக்டாக் பயன்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில்கொண்டு நீதிமன்றமே தாமாக முன்வந்து டிக்டாக் செயலியை இங்கு முற்றிலும் தடை செய்தால் மிகவும் நல்லது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு