திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மாருதி சுசுகி ஈகோ காரை வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், இவருடைய தந்தையின் மருத்துவச் செலவுக்காக பணத்தேவை இருந்ததால் அந்த காரை விற்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். எனவே, ஓ.எல்.எக்ஸ் மற்றும் முகநூல் வாயிலாக விளம்பரம் செய்திருக்கிறார் அமிர்தலிங்கம். இதனைப் பார்த்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவர், தன்னுடைய பெயர் ராஜா என்றும், தான் சென்னையைச் சேர்ந்தவன் என்றும், திண்டிவனம் வந்து அந்த காரை வாங்கிக் கொள்வதாகவும் அமிர்தலிங்கத்திடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

இதனை நம்பிய அமிர்தலிங்கம், கடந்த மாதம் 7-ம் தேதி செய்யாற்றிலிருந்து திண்டிவனம் ரயில்வே நிலையம் அருகே வந்திருக்கிறார். அப்போது, காரை ஓட்டிப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக் கூறிய சுலைமான், 'ராஜா' என பெயரிடப்பட்டிருந்த ஆதார் அட்டையை அமிர்தலிங்கத்திடம் கொடுத்திருக்கிறார். தொலைபேசி எண், ஆதார் அட்டை இருப்பதினால் நம்பிக்கை கொண்ட அமிர்தலிங்கம், காரை ஓட்டி பார்க்க அனுமதித்திருக்கிறார்.
அதன்படி காரை ஓட்டிச் சென்ற சுலைமான், வெகு நேரமாகியும் திரும்பவில்லையாம். இதனால் அச்சம் கொண்ட அமிர்தலிங்கம், தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கிறது. எனவே, திண்டிவனம் காவல் நிலையத்தில் அமிர்தலிங்கம் இது குறித்து புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மற்றும் துணை காவல் ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், சி.சி.டி.வி காட்சிகளின் மூலம் சோதனை மேற்கொண்டதோடு, குற்றம்சாட்டப்பட்ட சுலைமான் கொடுத்த ஆதார் அட்டையினை சோதித்துப் பார்த்திருக்கின்றனர்.

அப்போதுதான் அது போலி ஆதார் அட்டை என்பது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமின்றி தொலைபேசி எண்ணும் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரியின் பெயரில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், திண்டிவனம் மேம்பாலம் அருகே நேற்றைய தினம் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மாருதி சுசுகி ஈகோ காரை மடக்கி சோதனை செய்திருக்கின்றனர். சந்தேகத்துக்கிடமான அந்த காரில், நம்பர் பிளேட் மாறி இருந்திருக்கிறது. எனவே, அந்த ஓட்டுநரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் சுலைமான் என்பதும், அமிர்தலிங்கம் என்பவரிடமிருந்து காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்றதும் தெரியவந்திருக்கிறது. அவரிடமிருந்து காரை பறிமுதல் செய்த திண்டிவனம் போலீஸார், 420-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து விழுப்புரம் மாவட்ட சிறையில் (வேடம்பட்டு) அடைத்தனர்.