Published:Updated:

`நான் போலீஸ், இங்கு பேசக்கூடாது!'‍- `ஷாக்'கான காதலன்; காதலிக்கு நடந்த கொடுமை

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

திருச்சியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

திருச்சி துவாக்குடிப் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்கள். அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா (பெயர் மாற்றம்). 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வருவதுடன், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

கல்பனாவின் தந்தை கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றிவருவதாகவும், இந்நிலையில் தந்தையைப் பார்க்க அடிக்கடி செல்லும், கல்பனாவுக்கும் கல்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்படவே, இருவரும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் கல்பனாவை, அவரது காதலர் அவ்வபோது திருச்சி வந்துபார்த்து விட்டுச் செல்வது வழக்கம். அந்தவகையில் காதலியைப் பார்க்க வந்துள்ளார் அந்த வாலிபர். கடந்த 1-ம் தேதி விடுதியிலிருந்து வெளியே சென்றார்.

கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன்
கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன்

கடந்த 3-ம் தேதி அதிகாலை, துவாக்குடி காவல்நிலையத்துக்கு காதலுடன் வந்த கல்பனா, “கல்லூரி குடியிருப்புகள் அருகே உள்ள பேருந்து நிலையத்தில், இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இங்கு இருந்துகொண்டு பேசக் கூடாது என்று அவர்களை மிரட்டியதுடன், தான் காவலர் என்று கூறி, காதலனைக் கடுமையாகத் தாக்கினார். பின்னர், விடுதியில் என்னை விடுவதாக அழைத்துச் சென்று கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகப் புகார் கூறியுள்ளார்.

மாணவி கல்பனா அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த துவாக்குடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். மாணவி கல்பனாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூறிய அடையாளங்கள் உள்ள நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தியதுடன், கல்லூரி மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரின் அடையாளம் தெரிந்தது.

அந்த நபர் துவாக்குடி அடுத்த வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், அவர் மீது திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்தது. தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ``கல்பனாவைச் சந்திக்க வந்த காதலர் சம்பவம் நடந்த அன்று காலை திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் செல்ல இருந்ததாகவும், அதனால் கல்பனாவை என்.ஐ.டி கல்லூரி வந்து விட்டுவிட்டு, ஊருக்குச் செல்வதற்கு முன்பாக அந்தப் பேருந்து நிலையத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வந்த மணிகண்டன், பொது இடத்தில் இப்படிச் செய்யலாமா எனக் கூறி இருவரையும் தாக்கி, மாணவி படிக்கும் அதே என்.ஐ.டி கல்லூரி வளாகத்திலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது. மேலும் போலீஸார், மாணவி கல்பனாவிற்கு கஞ்சா பழக்கம் இருக்கலாம் என்றும், இருவரும் போதையில் இருந்ததாகவும் சந்தேகப்படுவதுடன், குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிகண்டன் தனியே இந்தச் செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என்றும்,

மாதிரிப்படம்
மாதிரிப்படம்

சி.சி.டி.வி கேமராக்கள் மற்றும் 24 மணி நேரப் பாதுகாப்பு உள்ள திருச்சி என்.ஐ.டி கல்லூரி வளாகத்திற்குள்ளே எப்படி மணிகண்டன் சர்வ சாதாரணமாகப் போய் வந்தார் என்றும், அதே வளாகத்தில் கல்பனாவை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் அடிப்படையில் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவி கல்பனா கடந்த 1-ம் தேதி விடுதியிலிருந்து வெளியில் சென்றபோது, விடுதி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்றாரா, இல்லை அவராக வெளியில் சென்றாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

``திருச்சி துவாக்குடி என்.ஐ.டி கல்லூரி மற்றும் அப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களை குறிவைத்து அப்பகுதியில் போதைப் பொருள் விற்கும் கும்பல் வலம் வருவதாகவும், அப்பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள்கள் சுலபமாக விற்கப்படுவதாகவும், இது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திட வேண்டும்'' என அப்பகுதி மக்கள் கூறிவருகிறார்கள். மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி என்.ஐ.டி கல்லூரி வளாகத்திலேயே கல்லூரி மாணவி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க உள்ளதாகக் கூறப்படுகிறது.