Published:Updated:

`ஃபேஸ்புக்கில் அவதூறு; கேரளாவில் 4 மாத தலைமறைவு!’ - காய்கறி லாரியில் சிக்கிய திருச்செந்தூர் இளைஞர்

மணிகண்டன்
மணிகண்டன்

மதுபோதையில் தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குறித்தும், குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் பெண்களை அவதூறாகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசி, ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டவரை கையில் நாட்டு வைத்தியக்கட்டுடன் போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், மதுபோதைக்கு அடிமையானவர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது இவர் செய்யும் வீடியோ பதிவுகள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து, `ஏய் அனிதா ராதாகிருஷ்ணா..! நீ எம்.எல்.ஏவா இருந்த இந்த 18 வருஷத்துல நீ செய்த எல்லா அயோக்கியத்தனத்துக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. அதை நான் வெளியிடுவேன்’ எனக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோவை தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் மணிகண்டன்.

அனிதா - மணிகண்டன்
அனிதா - மணிகண்டன்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து அனிதாவின் ஆதரவாளர்கள் திருச்செந்தூரிலுள்ள மணிகண்டனின் வீட்டுக்குச் சென்று, மணிகண்டனையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த சில நாள்களில், `உன்னோட ஊழலைப் பற்றி ஒரு மீம் போட்டதுக்கு மிரட்டிட்டு போயிட்ட. ஆனா, நீ ஒரு தப்பு பண்ணிட்டே அனிதா.. நீ என்னைத் தனியாக் கூப்பிட்டு பேசியிருக்கணும். அதை விட்டுட்டு என் வீட்டுல வந்து எல்லாரையும் மிரட்டி பயம் காட்டியிருக்கே. அடுத்து என்ன செய்யுறேண்ணு பாரு’ எனப் பதிலுக்கு மற்றொரு வீடியோவைப் பேசி மீண்டும் ஃபேஸ்புக்கில் பதிவு செய்தார்.

அதேபோல, திருச்செந்தூர் போலீஸாரைப் பற்றியும் அநாகரிகமாகப் பேசி பதிவிட்டார். இந்தச் சம்பவமும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ஊரைவிட்டு அப்படியே தலைமறைவாகி விட்டார் மணிகண்டன். இதையடுத்து, மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு திருச்செந்தூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தது. இப்புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவரை தேடி வந்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன்
கைது செய்யப்பட்ட மணிகண்டன்

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றியும், அச்சமுதாயப் பெண்களைப் பற்றியும் சாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் ஒரு வீடியோவைப் பேசி தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது. அந்த சமுதாய பிரதிநிதிகள், அவதூறு வீடியோ வெளியிட்ட மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செந்தூர் தாலுகா போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வந்தனர்.

இதற்கிடையே, கேரளாவிலிருந்து திருச்செந்தூருக்கு வந்த காய்கறி லாரியில் மணிகண்டன் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. குலசேகரன்பட்டினம் சந்திப்பு பைபாஸ் ரோட்டில் லாரியை மடக்கி அப்போது கையில் நாட்டுவைத்திய கட்டுடன் வந்த மணிகண்டனைக் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

``திருச்செந்தூரிலிருந்து தப்பிச் சென்ற மணிகண்டனை பல மாதமாகத் தேடி வந்தோம். கடந்த 5-ம் தேதி வெளியிட்ட அவதூறு வீடியோ மூலம் விசாரணை செய்தபோதுதான், மணிகண்டன், கேரளா மாநிலம் குருவாயூரில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த நான்கு மாதமாக சப்ளையராக வேலை செய்து வந்துள்ளதைக் கண்டுபிடித்தோம். அங்கும் மதுபோதையில் சம்பந்தமில்லாத வகையில் அவதூறாகப் பேசி வந்துள்ளார்.

அனிதா- மணிகண்டன்
அனிதா- மணிகண்டன்

இதையடுத்து அப்பகுதியினர் தாக்கியதில், கையில் முறிவு ஏற்பட்டு நாட்டுவைத்தியரிடம் கட்டு கட்டியதாக எங்களிடம் சொன்னார். பின்னர், திருச்செந்தூருக்குக் கிளம்பி வந்த ஒரு காய்கறி லாரியில், மணிகண்டன் வருவதை உறுதிப் படுத்தினோம். குலசேகரன்பட்டினத்தில் வைத்து கைது செய்தோம்” என்றனர்.

சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். ஃபேஸ்புக்கில் அவதூறாகப் பேசி வந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு