Published:Updated:

திருச்சியில் அதிகரிக்கும் போதை ஊசிப் பழக்கம்; வசமாக மாட்டிக்கொண்ட 7 இளைஞர்கள்!

போதை ஊசி
போதை ஊசி

மருந்துக்கடைகளில் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி, அதைத் தூளாக்கி, செலின் வாட்டரோடு கலந்து கை மற்றும் இடுப்புப் பகுதியில் நீடில் மூலமாக ஏற்றிக்கொள்கிறார்கள்.

திருச்சி சுற்றுவட்டாரங்களில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களிடம் போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் மதுவின் விலையும் அதிகமாக இருந்த காரணத்தால் போதை ஊசி விற்பனையும் அதிகரித்துள்ளது.

திருச்சி
திருச்சி

இதற்கு மாற்று யோசனையாக மருந்துக் கடைகளில் குறிப்பிட்ட சில மாத்திரைகளை வாங்கி, செலின் வாட்டரோடு கலந்து நீடில் மூலமாக இளைஞர்களின் உடம்பில் ஏற்றிக்கொள்கிறார்கள். இதன் ஆபத்தை உணராமல் பல இளைஞர்கள் இதற்கு அடிமையாவதாகவும் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடப்பதாக, திருச்சி கமிஷனருக்குத் தகவல் கிடைக்க, கண்காணிப்பதற்காக ஒரு டீமை நியமித்திருக்கிறார். அந்த டீம்தான் சிறப்பாகச் செயல்பட்டு ஏழு பேரைப் பிடித்திருக்கிறது. என்ன நடந்தது?

திருச்சி ஜீவா நகர் ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகளும் கஞ்சாவும் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

வலி நிவாரண மாத்திரைகள்
வலி நிவாரண மாத்திரைகள்

விசாரணையில் அவர்கள் போதை மாத்திரை விற்கும் கும்பல் எனத் தெரிந்ததால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 470 மாத்திரைகள், ஒரு பாட்டில் செலின் மருந்து, பத்து நீடில்கள், ஐந்து கிலோ கஞ்சா, அவர்கள் பயன்படுத்திய டூ வீலர்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள். வரகனேரியைச் சேர்ந்த ராம்நாத், தென்னூரைச் சேர்ந்த நந்தகுமார், குமார், பாலாஜி, பிரகாஷ், குமரேசன் உள்ளிட்ட ஏழு பேரைக் கைதுசெய்திருக்கிறார்கள்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் சிறப்பாகச் செயல்பட்ட தனிப்படையினரைப் பாராட்டியதோடு, `திருச்சி மாநகரிலுள்ள மருந்துக் கடைகளில் மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள், மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது. அப்படி விற்பனை செய்தால், அந்தக் கடையின் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்’ எனக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி காவல்துறை ஆணையர் அருண்
திருச்சி காவல்துறை ஆணையர் அருண்

இந்த வழக்கை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் தயாளனிடம் பேசினோம். ``சமீபகாலமாகவே திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தத் தகவல் ஆணையருக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் ஒரு டீமை நியமித்தார். அந்த டீம் கடந்த ஒரு மாத காலமாக விசாரணை செய்து, ஒருவரைப் பிடித்தது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மற்றவர்களையும் பிடித்தோம்.

அவர்கள் மது, கஞ்சா விலை அதிகமாகிவிட்டது என்பதால் சில குறிப்பிட்ட மாத்திரைகளையும், குறிப்பிட்ட மருந்தையும் பயன்படுத்துகிறார்கள். அந்த மருந்தை கணிசமான அளவு பயன்படுத்தினால் மட்டுமே அவை மருந்து.

போதை ஊசி
போதை ஊசி

இவர்கள் அதிக அளவில் அதைத் தூளாக்கி, செலின் வாட்டரோடு கலந்து கை மற்றும் இடுப்புப் பகுதியில் நீடில் மூலமாக ஏற்றிக்கொள்கிறார்கள். அது கடுமையான போதை தரும் என்கிறார்கள். நாங்கள் பிடித்த ஏழு பேரும் 25 வயதுக்குக் குறைவான இளைஞர்களே. அவர்களிடம் விசாரிக்கையில் மது, கஞ்சாவின் விலை அதிகமாக இருப்பதால் இது போன்ற மாத்திரை விஷயங்களில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். இந்தச் செயல் உடம்புக்கு மிகவும் கெடுதல் தரக்கூடியது. இதை இளைஞர்கள் மறந்துவிட்டு மீண்டு வெளியில் வர வேண்டும்" என்று எச்சரித்தார்.

அடுத்த கட்டுரைக்கு