Published:Updated:

`ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்'- திருச்சியில் கொடிகட்டிப் பறக்கும் பணப்பறிப்பு!

திருச்சி
திருச்சி

மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. `பாடி மசாஜ்' (ஸ்பா) என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து இந்த டீம் பணத்தைக் கறப்பதாக போலீஸாருக்குப் புகார் சென்றுள்ளது.

திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி மாநகரில் 'ஸ்பா' சென்டர் என்ற பெயரில் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை அருகேயுள்ள மூக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் உமா, பழனியப்பன். இவர்கள் இருவரும் திருச்சி பொன்னகர் மற்றும் காந்திநகர் பகுதியில் 'ஆரா ஆயுர்வேதிக் ஸ்பா' என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்திவருகின்றனர்.

இங்கு மசாஜ் சென்டர் என்கிற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைக்கவே போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஒரு பெண், தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோரை மீட்டு காஜாமலை அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இது போன்ற ஸ்பாக்கள் நடக்கின்றனவா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

இது குறித்து தொடர்ச்சியாகப் புகாரளித்துவரும் சமூக ஆர்வலர் முருகனிடம் பேசினோம். ``திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரிச் சீட்டு விற்பனை, ஸ்பா தொழில் என்ற பெயரில் பாலியல் தொழில் எனச் சட்ட விரோதச் செயல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

திருச்சி காவல்துறை ஆணையர் அருண்
திருச்சி காவல்துறை ஆணையர் அருண்

`ஸ்பா மையம்’ என்ற போலியான பெயரில் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து, ஏழ்மையிலுள்ள பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைத் தடுக்க வேண்டும் என்று பலமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். அவர்கள் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.

காரணம், இந்தத் தொழில்களின் பின்புலத்தில் காவல்துறையைச் சேர்ந்த சிலரும், அவர்களது வாரிசுகளும் இருக்கிறார்கள். அதோடு இந்தத் தொழிலை நடத்தும் உரிமையாளர்கள், போலீஸாரை `சிறப்பாக’ கவனிப்பதால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தனர். இந்தநிலையில், முன்னாள் ஆணையராக இருந்த லோகநாதன் இவற்றாஇ இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கியதோடு, இவற்றுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார். ஆனால், இப்போது மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

முருகன் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸார் வட்டாரத்தில் பேசினோம். ``எதற்கெடுத்தாலும் போலீஸாரைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். 'ஸ்பா' என்கிற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் வருகிறது. அதன்மீது நடவடிக்கை எடுக்கிறோம். கைதானவர்களை விசாரித்து அடுத்தடுத்த நெட்வொர்க்கைப் பிடிக்கிறோம். இதில் காவல் துறையினர் எப்படி சம்மந்தப்பட்டிருக்கிறோம்... யாரோ ஒருவர் செய்யும் செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையை குறை சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? குற்றச்சாட்டு வருகையில் அதன்மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றார் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு