Published:Updated:

நெல்லை: முன்பகை; சிகரெட் புகை; வாக்குவாதம்- துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது!

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெரியதுரை
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெரியதுரை

நெல்லையில் கடை முன்பு நின்று புகைபிடித்த முன்னாள் ராணுவ வீரரைக் கண்டித்த கடைக்கார், துப்பாக்கியால் சுடப்பட்டார். அதில் காயமடைந்த கடைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னாள் ராணுவ வீரரை போலீஸார் கைதுசெய்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியதுரை. 32 வயதான அவர், தன் தந்தையுடன் சேர்ந்து அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்திவருகிறார். பெரியதுரை பாரதிய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துவருகிறார்.

சிகிச்சை பெறும் பெரியதுரை
சிகிச்சை பெறும் பெரியதுரை

இறைச்சிக்கடை நடத்திவரும் பெரியதுரைக்கும், அவரது கடை அருகில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான ஜெபமணி என்பவருக்கும் இடையே முன்பகை இருந்திருக்கிறது. இறைச்சியை சாலையோரம் கொட்டுவது. கடைக்கு வருபவர்களின் வாகனங்களை வீடு முன்பாக நிறுத்துவது தொடர்பாக இருவரும் அடிக்கடி சண்டையிட்டுவந்திருக்கிறார்கள்.

முன்பகை காரணமாகச் சண்டை நடந்தபோதெல்லாம், முன்னாள் ராணுவ வீரரான ஜெபமணி, தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வந்து பெரியதுரையையும், அவரின் தந்தையையும் சுட்டுவிடுவதாக மிரட்டிவந்திருக்கிறார். இருவரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

இந்தநிலையில், ஜெபமணி இன்று இறைச்சிக்கடை முன்பாக நின்று புகைபிடித்திருக்கிறார். அப்போது கடையிலிருந்த பெரியதுரையின் தந்தை அதைத் தட்டிக்கேட்டிருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றியதால் வீட்டுக்குள் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்த ஜெபமணி, கடையிலிருந்த பெரியதுரையும், அவரின் தந்தையையும் நோக்கிச் சுட்டிருக்கிறார். அதில் பெரியதுரைக்கு கையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடத்திய ஜெபமணி
துப்பாக்கிச்சூடு நடத்திய ஜெபமணி

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சத்தமிட்டதால் ஜெபமணி வீட்டுக்குள் சென்றுவிட்டார். காயமடைந்த பெரியதுரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஜெபமணியைக் கைதுசெய்து அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

காயமடைந்த பெரியதுரை
காயமடைந்த பெரியதுரை

இதற்கிடையே, பெரியதுரை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட ஜெபமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பா.ஜ.க-வினர் பெருமாள்புரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு