Published:Updated:

திருநெல்வேலி: `மூன்று பேர் மாயம்; அடித்துக் கொல்லப்பட்டார்களா திருநங்கைகள்?’ - போலீஸ் விசாரணை

திருநங்கை பவானி
திருநங்கை பவானி

நெல்லையில் இரண்டு திருநங்கைகள் உட்பட மூவர் அடித்துக் கொல்லப்பட்டனரா என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

நெல்லையை அடுத்த நரசிங்கநல்லூரில் அரசு சார்பாகக் கட்டிக் கொடுக்கப்பட்ட திருநங்கைகளுக்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றிலுள்ள 29 குடியிருப்புகளில் ஏராளமான திருநங்கையர்கள் தங்கியிருக்கின்றனர். இங்குள்ள சிலர் வெளியாட்களுடன் தங்கிக் குடும்பம் நடத்திவருகின்றனர்.

ரேணுகா என்ற திருநங்கை சேலத்தைச் சேர்ந்த ரிஷி என்ற தங்கவேல் என்பவருடன் குடும்பம் நடத்திவந்தார். அவருடைய வீட்டுக்கு எதிரேயுள்ள வீட்டில் பவானி என்ற திருநங்கை முருகன் என்பவருடன் குடித்தனம் நடத்திவந்தார். பகலில் கடைகளில் வசூல் செய்யும் தொழில் செய்துவந்த திருநங்கைகள், தாங்கள் விரும்பிய நபருடன் குடியிருந்துவந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் திருநங்கை பவானிக்குக் குழந்தை வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது.

திருநங்கை அனு
திருநங்கை அனு

இது தொடர்பாக அவர் தனக்குத் தெரிந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதனால் பலரும் பவானிக்குக் கைக்குழந்தை கிடைக்குமா என்று தேடி வந்திருக்கிறார்கள். பவானியின் வீட்டுக்கு எதிரில் திருநங்கை ரேணுகாவுடன் குடியிருந்த ரிஷி என்ற தங்கவேலுக்கு இந்தத் தகவல் தெரியவந்ததும், தனக்குத் தெரிந்த இடத்தில் கைக்குழந்தை இருப்பதாகவும், அந்தக் குழந்தையை பவானி தத்தெடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

`வெடிகுண்டு வீசிக் காவலர் கொலை; படுகாயமடைந்த ரௌடியும் பலி!’ - தூத்துக்குடியில் என்ன நடந்தது?

அதை உண்மை என நம்பிய பவானி, கைக்குழந்தையைத் தத்தெடுப்பது தொடர்பாக ஆர்வம்காட்டியிருக்கிறார். அதைப் பயன்படுத்திக்கொண்ட தங்கவேல் திருநங்கை பவானியிடமிருந்து 3 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கிறார். ஆனால், உறுதியளித்தபடி குழந்தையை வாங்கிக் கொடுக்காமல் காலதாமதம் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. பவானியும் அவரிடம் அடிக்கடி குழந்தை குறித்துக் கேட்டுவந்திருக்கிரார். குழந்தையைத் தேடிவருவதாக தங்கவேல் சமாதானப்படுத்தி வந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் பவானிக்குச் சந்தேகம் வந்ததால், தனக்கு உடனடியாகக் குழந்தையை வாங்கிக் கொடுக்க வேண்டும் அல்லது பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்திருக்கிறார். அதனால், குழந்தையை வாங்கிக் கொடுப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அவரை அழைத்துச் சென்றிருக்கிறார். தங்கவேலுவுடன் நண்பர்கள் சிலரும் இருந்திருக்கிறார்கள். பவானியுடன் அனு என்ற திருநங்கையும் உடன் சென்றிருக்கிறார்.

திருநங்கைகள் புகார்
திருநங்கைகள் புகார்

அவர்கள் சென்று ஒரு வாரத்துக்கு மேலாகியும் திரும்பி வரவில்லை. அதனால், சக திருநங்கைகள் அவர்களைத் தேடி வந்திருக்கிறார்கள். பவானியும் அனுவும் வேறு ஊருக்குச் சென்றிருப்பார்கள் எனப் பலரும் நம்பியிருந்தார்கள். இந்த நிலையில், பவானியின் உடல் இறந்த நிலையில் கிடப்பது போன்ற புகைப்படம் திருநங்கை ஒருவருக்கு வந்திருக்கிறது. இதனால், திருநங்கைகள் குடியிருப்புப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பவானியின் உடல் கிடப்பது போன்ற புகைப்படம் உண்மையானதுதானா எனப் பலரும் விவாதித்துவந்த நிலையில், இன்று காலை தங்கவேல் திருநங்கைகள் குடியிருப்புக்கு வந்திருக்கிறார். அவரிடம் அங்கிருந்த திருநங்கைகள், அனு மற்றும் பவானி பற்றிக் கேட்டுள்ளனர். அதற்கு தங்கவேல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அதனால், திருநங்கைகளுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தங்கவேலுவிடமும் அவருடைய நண்பர்களான செல்லத்துரை, ஸ்னோவின் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் பவானி, அனு குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கைது
கைது

இந்த நிலையில், திருநங்கைகள் பவானி, அனு மற்றும் பவானியின் நண்பரான முருகன் ஆகியோர் குறித்து உண்மையான தகவல் தெரிய வேண்டும் என திருநங்கைகள் வலியுறுத்தினர். அவர்களை அழைத்துச் சென்றவர்கள், அவர்கள் பற்றிப் பேச மறுப்பதாகவும் போலீஸாரிடம் புகாரளித்தார்கள். இரு தொடர்பாக தங்கவேல், ரேணு, ஹரீனா உட்பட ஐந்து பேரை சுத்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை : மருமகனுக்கு பதிலாக மாமனார் கொலை! - சிறைக்குச் சென்றதால் உயிர் தப்பிய ரௌடி

திருநங்கைகள் இரண்டு பேர் உட்பட மூன்று பேர் மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து தங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என வலியுறுத்திய திருநங்கைகள், சுத்தமல்லி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருநங்கைகள் உள்ளிட்ட ஐந்து பேரிடமும் காணாமல் போனவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வந்தார்கள்.

கிணற்றில் மிதக்கும் சாக்கு மூட்டைகள்
கிணற்றில் மிதக்கும் சாக்கு மூட்டைகள்

இதற்கிடையே, பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் நான்குவழிச் சாலை அருகிலுள்ள பாழுங்கிணற்றில் சந்தேகத்துக்குரிய வகையில் சாக்கு மூட்டைகள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த சாக்குப் பைகளிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசுவதால், அவற்றினுள்ளே உடல்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காணாமல் போன மூவரின் உடல்கள் அவற்றினுள்ளே இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதால், சாக்கு மூட்டைகளை தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து வெளியே எடுக்கும் முயற்சி நடந்துவருகிறது. இதற்கிடையே, பிடிபட்ட இரு திருநங்கைகள் உட்பட ஐந்து பேரிடம் நெல்லை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு