Published:Updated:

`திருமணமான பெண்ணுடன் பழக்கம்; குடும்பத்தில் குழப்பம்!’ -அடுத்தவர் மனைவியுடன் தூக்கில் தொங்கிய இளைஞர்

திருப்பத்தூர்
திருப்பத்தூர்

இன்னொருவரின் மனைவியுடன் இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் நகரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிப் பகுதியிலுள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்று காலை தகவலறிந்ததும், குரிசிலாப்பட்டு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தூக்கில் தொங்கிய சடலங்கள்
தூக்கில் தொங்கிய சடலங்கள்

விசாரணையில் தூக்கில் தொங்கியநிலையில் இருந்தது, வாணியம்பாடியை அடுத்துள்ள பலப்பநத்தம் ஏரிவட்டம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரீட்டா (30) என்பது தெரியவந்தது. சக்திவேலுக்குத் திருமணமாகி மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இதேபோல் ரீட்டாவுக்கும் திருமணமாகி கணவரும் மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

`அரக்கோணம் எஸ்.ஐ-யின் தவறான நட்பு!’ - அதிரடி நடவடிக்கை எடுத்த வேலூர் டி.ஐ.ஜி

இந்தநிலையில், சக்திவேலுவுக்கும் ரீட்டாவுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாகவும் சொல்கிறார்கள். நாளடைவில், இருவருக்குமான பழக்கம் அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. சக்திவேலை அவரது மனைவியும், ரீட்டாவை அவரது கணவரும் கண்டித்திருக்கிறார்கள்.

திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார்
திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார்

தங்களால் சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருவரும் இருந்திருக்கிறார்கள். இந்தச் சூழலில், நேற்று காலை காதலி ரீட்டாவுடன் வீட்டிலிருந்து வெளியேறிய சக்திவேல், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் கூறினர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தீவிர விசாரணை நடந்துவருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமார் நம்மிடம் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு