Published:Updated:

`நள்ளிரவில் திருடுபோன கடப்பா கல்!’ -சிசிடிவி கேமராவால் சிக்கிய திருப்பத்தூர் தி.மு.க பிரமுகர்?

திருடப்படும் கடப்பா கல்
திருடப்படும் கடப்பா கல்

கடையின் வெளியில் போடப்பட்டிருந்த கடப்பா கல்லை நள்ளிரவு நேரத்தில் திருடிச்சென்ற தி.மு.க பிரமுகர், சிசிடிவி கேமரா மூலம் சிக்கியிருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில், இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், நோய்ப் பரவலைத் தடுக்க ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய மூன்று நகரங்களும் 100 சதவிகிதம் லாக் டெளன் செய்யப்பட்ட பகுதியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலிருக்கிறார்கள்.

புகாருக்குள்ளான கிருஷ்ணன்
புகாருக்குள்ளான கிருஷ்ணன்

இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திருப்பத்தூரைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் கடப்பா கல்லைத் திருடிச்செல்லும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகாருக்குள்ளான அந்த தி.மு.க பிரமுகரின் பெயர் எஸ்.கிருஷ்ணன். இவர், திருப்பத்தூர் நகரம் 27-வது வார்டு புதுப்பேட்டை சாலைப் பகுதியில் வசிக்கிறார்.

அதே பகுதியில், கார் ஷெட் வைத்துள்ள கிருஷ்ணன் சம்பவத்தன்று நள்ளிரவில் தனது உறவினரை இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு கார் ஷெட் பகுதிக்குச் சென்றார். அங்கு பக்கத்து கடையில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்குப் போடப்பட்டிருந்த கடப்பா கல்லைத் தூக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் செல்கிறார்.

எடுத்துச்செல்லப்படும் கடப்பா கல்
எடுத்துச்செல்லப்படும் கடப்பா கல்

இந்த விவகாரம் குறித்து தி.மு.க பிரமுகர் கிருஷ்ணனிடம் பேசினோம். ``போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அந்தக் கல்லை எடுத்து பக்கத்தில் வைத்தேன். நான், திருடிச் செல்லவில்லை. நான் என்று தெரியாமல், இடத்துக்குச் சொந்தக்காரர் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளார். பின்னர், என்னிடம் வருத்தம் தெரிவித்தார். தி.மு.க-வில் நான் இப்போது பொறுப்பில் இல்லை. எனக்கு ஆகாதவர்கள் இப்படியான தவறான தகவலைப் பரப்பி வருகிறார்கள்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு