Published:Updated:

`எங்களை மிரட்டுவதற்கான வேலை இது!' -கார் தீ எரிப்பு சம்பவத்தால் கொதித்த திருப்பூர் இந்து முன்னணி

பற்றி எரியும் கார்
பற்றி எரியும் கார்

தொடர்ந்து தீ வைக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை.

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம் (50). சொந்தமாகப் பனியன் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனக்குச் சொந்தமான மாருதி சுஸூகி காரை வீட்டுக்குமுன் நிறுத்திவிட்டு தூங்கச் சென்றிருக்கிறார்.

அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கார் வெடித்துச் சிதறும் சத்தம் கேட்க, பதறியடித்து வெளியே ஓடி வந்திருக்கிறார். கார் முழுக்க தீப்பற்றி திகுதிகுவென எரிந்துகொண்டிருக்க, உடனே தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முன்பே, கார் முற்றிலுமாக எரிந்து இரும்புக் கூடாகியிருக்கிறது.

தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

கார் தானாகவே தீப்பற்றி எரிந்ததா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதில், மூகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்தபடி இரண்டு டூவீலரில் நான்கு பேர் வந்ததும், அதில் ஒருவர் காருக்குத் தீ வைத்ததும் தெரிந்திருக்கிறது. இதையடுத்து ஒன்றுகூடிய இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பி.ஜே.பி-யினர் கொங்கு மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

`காருக்கு தீ வைத்த ஆசாமிகளை உடனே கைது செய்ய வேண்டுமென’ கோஷம் எழுப்பினர். இதற்கிடையே, இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர், டூவிலர்கள் மூலம் திருப்பூர் வீதிகளில் சென்று திறந்திருந்த கடைகளை அடைக்கும்படி வலியுறுத்தியதாகவும் அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், இந்த கார் எரிப்பு விவகாரம் மேலும் பரபரப்பானது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, காரை எரித்த மர்ம நபர்கள் யார்... என்ன காரணம்..? என விசாரித்து வருகின்றனர்.

எரிந்து எலும்புக் கூடான கார்
எரிந்து எலும்புக் கூடான கார்

மோகனசுந்தரம் பனியன் கம்பெனி வைத்திருந்தாலும், ஃபைனான்ஸ் மற்றும் ஏலச்சீட்டு போன்றவற்றை நடத்தி வருகிறார். அதில் பாதிக்கப்பட்ட நபரோ, தொழில் போட்டியாலோ இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. போலீஸாரும் இந்தக் கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

`300 ரூபாயெல்லாம் ஒரு காசா?' - திருப்பூர் கடை உரிமையாளரைத் தாக்கிய வி.ஹெச்.பி நிர்வாகிகள்

இந்த விவகாரம் குறித்துப் பேசும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ``கார் எரிப்புச் சம்பவத்தையடுத்து, இந்து முன்னணியினர் கடைகளை அடைக்கச் சொல்லி அடாவடி செய்ததோடு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். காரை எரித்த மர்ம நபர்கள் மட்டுமல்லாது, வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கொந்தளிக்கின்றனர்.

போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் இந்து முன்னணியினர்
போலீஸாருடன் பேச்சுவார்த்தையில் இந்து முன்னணியினர்

இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் கிஷோர் குமாரோ, ``திட்டமிட்டு இந்தக் கார் எரிப்பு சம்பவத்தைச் செய்திருக்கின்றனர். ஏற்கெனவே திருப்பூரில் இந்து முன்னணியைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகளின் பனியன் கம்பெனிகளுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குற்றவாளிகளை இப்போது வரை போலீஸார் கைது செய்யவில்லை.

திருப்பூர் பகுதிகளில் இந்து முன்னணி வலிமையாக இருப்பதனால், எங்களை மிரட்டவே இப்படியான சம்பவங்களைச் செய்து வருகின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு