Published:Updated:

திருத்தணி: திமுக எம்.எல்.ஏ-வை மிரட்டி, பணம்பறிக்க முயன்ற தம்பதி; சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீஸ்

திருத்தணி

திருத்தணி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சந்திரனிடம் பணம் பறிக்க முயன்ற தம்பதியை போலீஸார் கைதுசெய்தனர்.

திருத்தணி: திமுக எம்.எல்.ஏ-வை மிரட்டி, பணம்பறிக்க முயன்ற தம்பதி; சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீஸ்

திருத்தணி தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சந்திரனிடம் பணம் பறிக்க முயன்ற தம்பதியை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
திருத்தணி

திருத்தணி தொகுதியின் தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ சந்திரன், 27.1.2022-ம் தேதி திருத்தணி காவல் நிலையத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் திருத்தணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளேன். கடந்த 25.1.2022-ம் தேதி என்னுடைய செல்போன் நம்பருக்கு மதியம் 1:15 மணியளவில் ஒர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், தான் தலைமைச் செயலகத்தில் உள்துறையில் டி.எஸ்.பி-யாக பணிபுரிவதாகவும், திருத்தணி தொகுதி தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளதாகவும் கூறினார்.

சந்திரன் எம்எல்ஏ
சந்திரன் எம்எல்ஏ

மேலும், அவர் அந்தப் புகாரை தன்னால் சரிசெய்ய முடியும் எனவும், அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும் எனவும் தெரிவித்தார். அதன் பிறகு 25 லட்சம் ரூபாயைத் தயார் செய்து வைக்குமாறு கூறிய அந்த நபர், அந்தப் பணத்தைத் தான் சொல்லும் இடத்தில் கொண்டுவந்து கொடுக்கும்படி தெரிவித்தார். பணத்தை எங்கு கொண்டு வந்து கொடுப்பது என்பதைப் பற்றி பிறகு தெரிவிப்பதாக அந்த நபர் கூறினார். `நீங்கள் யார்... திருத்தணி தொகுதி சார்ந்த பிரச்னை என்ன’வென்று நான் கேட்டபோது, `அது பெரிய பிரச்னை. தேவையில்லாமல் அதிகம் கேள்விகள் கேட்டு நீங்களே சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். அது விஸ்வரூபம் எடுத்தால் ஆபத்தாகிவிடும். நான் அதைச் சரிசெய்து கொடுக்கிறேன். என்னை நம்புங்கள். இதைப் பற்றி வேறு யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. ஏனென்றால் இது மிகவும் ரகசியமான விஷயம். உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இதைச் செய்கிறேன். இதைப் பற்றி வேறு யாரிடமாவது விசாரித்தால் நானே நினைத்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. மீண்டும் பிறகு பேசுகிறேன்' என தெரிவித்துவிட்டு போனை கட் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவரத்தைத் தெரிந்துகொள்ள 25.1.2022-ம் தேதி மாலை 4:15 மணியளவில் மர்ம நபர் பேசிய செல்போன் நம்பருக்கு நான் (எம்.எல்.ஏ சந்திரன்) தொடர்பு கொண்டபோது, `25 லட்சம் ரூபாயை ரெடி செய்துவிட்டீர்களா' என அந்த நபர் கேட்டார். அதற்கு நான் `நாளை பணம் தருகிறேன்’ என்று தெரிவித்தேன். அப்போது அவர், `நான் விளாத்திகுளம் எம்.எல்.ஏ-வுக்கும் ஒரு பிரச்னையைச் சரிசெய்து கொடுத்துள்ளேன். அவரும் 25 லட்சம் ரூபாயை கொடுக்கவிருக்கிறார். எனவே என்னை நம்புங்கள். அவர் ரகசியமாக இருந்தார். அவர் ஒத்துழைத்ததால் அவருடைய பிரச்னையைத் தீர்த்துவிட்டேன். அதேபோல் நீங்களும் உங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ளுங்கள்' என்றும் சொன்னார்.

யசோதா
யசோதா

மேலும் போனில் பேசிய நபர், ` 27.1.2022-ம் தேதி காலை ஏதாவது ஓர் எண்ணிலிருந்து தொடர்புகொண்டு நேரம் மற்றும் இடத்தைத் தெரிவிக்கிறேன். அந்த இடத்துக்கு வந்து பணத்தைக் கொடுங்கள்' என்று இணைப்பை துண்டித்துவிட்டார். எனக்குச் சந்தேகம் ஏற்பட்டு விளாத்திகுளம் எம்.எல்.ஏ-வைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, `அது மாதிரி ஒன்றும் கிடையாது. என்னிடமும் பணம் கேட்டார்கள். அதற்கு நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டேன்' என்று தெரிவித்தார். அதன் மூலம், ஏதாவது கூறி பணம் பறிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டவர் செயல்படுகிறார் என்பதை என்னால் உணர முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதைத் தொடர்ந்து, 27.1.2022- ம் தேதி காலை மீண்டும் அதே நபர் வேறு ஒரு நம்பரிலிருந்து என்னைத் தொடர்புகொண்டு திருத்தணியில் உள்ள ஹோட்டல் அருகில் கறுப்பு நிற காரில், தான் வருவதாகவும் பணத்தைக் கொண்டு வருமாறும் என்னிடம் தெரிவித்தார். எனவே, என்னிடம் தலைமைச் செயலகத்தில் பணியாற்றுவதாகக் கூறியதோடு, தொகுதிப் பிரச்னையை தீர்த்துக் கொடுக்க 25 லட்சம் ரூபாய் கேட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, 419, 420 ஆகிய இரண்டு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விஜயகுமார்
விஜயகுமார்

இதையடுத்து மர்ம நபரைக் கையும் களவுமாகப் பிடிக்க திருத்தணி போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி எம்.எல்.ஏ-வின் உதவியாளர் சதீஷிடம் ஒரு பையைக் கொடுத்து ஹோட்டல் அருகே காத்திருக்க வைத்தனர். அப்போது பணத்தைப் பெற ஹோட்டல் அருகில் கறுப்பு கலர் காரில் வந்த நபரை அங்கு மறைந்திருந்த போலீஸார் சுற்றிவளைத்தனர். பின்னர் காரிலிருந்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (43), அவரின் மனைவி யசோதா (41) ஆகிய இருவரை போலீஸார் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ-வை ஏமாற்றி பணத்தைப் பறிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி அரசு அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இரண்டு செல்போன்கள், சம்பவத்துக்குப் பயன்படுத்திய கார், பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் விஜயகுமார், தலைமைச் செயலகத்தில் தற்காலிகமாக பணியாற்றிவந்தது தெரியவந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism