Published:Updated:

திருத்தணி: குடிபோதையில் தகராறு! - சிறையிலிருந்து திரும்பிய ரெளடி, மனைவியின் தம்பியைக் கொன்ற கொடூரம்

படுகொலை
News
படுகொலை

திருத்தணியில், குடும்பத் தகராறில் மனைவியின் தம்பியை கணவரே வெட்டிப்  படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அக்கைய்யநாயுடு தெருவைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (28). இவருக்கு சரண்யா (22) என்ற மனைவியும், லத்தீப் (5) என்ற மகனும் உள்ளனர். ரௌடியான இவர்மீது திருத்தணி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2016-ல் திருத்தணியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக ஜாகீர் உசேனும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலைவழக்கில் சுமார் நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திலிருந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறார். வெளியில் வந்ததும் வழக்கம்போல் ஜாகீர் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து செய்வது எனக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

திருத்தணி
திருத்தணி

இந்தநிலையில், சிறையிலிருந்து வந்ததிலிருந்து தினமும் தன் மனைவி சரண்யாவிடம் மது குடிக்கப் பணம் கேட்டு ஜாகீர் தகராறில் ஈடுபட்டு, அடித்துத் துன்புறுத்திவந்துள்ளார். இது தொடர்பாக சரண்யாவின் தம்பி குமரேசன் (22) ஜாகீர் உசேனை கண்டித்துள்ளார். அதன் காரணமாக, இருவருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது. தன் அக்கா சரண்யாவிடம் ஜாகீர் உசேன் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடும்போதெல்லாம் குமரேசன் தன் நண்பர்களுடன் வந்து தட்டிக்கேட்டுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன், மனைவியின் தம்பி குமரேசனைத் தீர்த்துக்கட்ட சக நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

நேற்று மதியம் திருத்தணி பஜாரில் நண்பர்களுடன் அமர்ந்துகொண்டிருந்த குமரேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜாகீர் உசேன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் பதிலுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஜாகீரை பலமாகத் தாக்கியிருக்கிறார். பஜாரில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குமரேசன் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், ஆத்திரம் தணியாத ஜாகீர் உசேன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு போதையில் குமரேசனை தொலைபேசியில் அழைத்து அவதூறாகப் பேசியிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திருத்தணி, ஸ்டாலின் நகர் உச்சி பிள்ளையார் கோயில் அருகில் நின்றுகொண்டிருந்த குமரேசனைத் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து ஜாகீர் உசேன் கத்தியால் சரமாரியாகக் கழுத்துப் பகுதியில் வெட்டியிருக்கிறார். அதில் நிலைகுலைந்த குமரேசன், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமரேசன் உயிரிழந்ததை அடுத்து ஜாகீர் உசேனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர்.

 கொலை
கொலை

தகவலறிந்து திருத்தணி போலீஸாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார், திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் திருத்தணி காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து ஜாகீர் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். மேலும், போலீஸார், படுகொலை செய்யப்பட்ட குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருத்தணி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தநிலையில், படுகொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே கொலையாளி ஜாகீர் உசேன் அவரது கூட்டாளிகள் இருவருடன் அரக்கோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து அரக்கோணம் காவல் நிலையம் விரைந்த திருத்தணி போலீஸார், குற்றவாளிகளை அங்கிருந்து திருத்தணிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

குடும்பத் தகராறில் மனைவியின் தம்பியை அவரது கணவரே குடிபோதையில் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.