Published:Updated:

`பின்தொடர்ந்த கும்பல்; முன்விரோதம்?’-பழவேற்காடு ஆட்டோ டிரைவருக்கு நடுரோட்டில் நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட சூரியபிரகாஷ்
கொலை செய்யப்பட்ட சூரியபிரகாஷ்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே உள்ள இடையான்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமணமான ஒன்றரை ஆண்டுக்குள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே இடையான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ். இவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இடையான் குளத்திலிருந்து பழவேற்காடு பஜாருக்கு சூரியபிரகாஷ் பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கொடி மரம் என்ற இடத்தில் மர்ம நபர்கள் கத்தி அரிவாளுடன் சூரியபிரகாஷை வழிமறித்தனர். அந்தக் கும்பலிடமிருந்து சூரியபிரகாஷ் தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், அதற்குள் அந்தக் கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. அதில் ரத்த வெள்ளத்தில் சூரியபிரகாஷ் சரிந்தார்.

வெட்டுக்காயங்களுடன் சூரியபிரகாஷ்
வெட்டுக்காயங்களுடன் சூரியபிரகாஷ்
`4 நாள்களில் 2 கொலை; கலெக்டர், எஸ்.பி அலுவலகங்கள் அருகே சம்பவங்கள்!’ - பதறும் பெரம்பலூர்

சூரியபிரகாஷின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் மர்மக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பின்னர் சம்பவம் குறித்து திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸுக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சூரியபிரகாஷை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இதையடுத்து அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். சூரியபிரகாஷ் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சூரியபிரகாஷ்
சூரியபிரகாஷ்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட சூரியபிரகாஷ், ஆட்டோ ஓட்டி வந்தார். இடையான்குளம் கிராமத்தில் இரு பிரிவினருக்கு முன்விரோதம் இருந்துவந்த சூழலில் சூரியபிரகாஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். அதனால் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. மேலும், சூரியபிரகாஷின் தலை, முகம் ஆகிய இடங்களில்தான் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

கொலையாளிகளிடமிருந்து தப்பிக்க சூரியபிரகாஷ் கடுமையாகப் போராடியுள்ளார். தனியாக அவர் சிக்கிக் கொண்டதால் சுற்றிவளைத்த கும்பல் அவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துவிட்டார். அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம். அதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர்.

`செல்லப்பிராணிகள் கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்!’ - போக்ஸோவில் கைதான  சென்னை இளைஞர்
கொலை
கொலை
மாதிரிப் படம்

இதற்கிடையில் கொலை நடந்த இடத்துக்குப் பொன்னேரி போலீஸ் டி.எஸ்.பி பவன்குமார்ரெட்டி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சூரியபிரகாஷ் ஓட்டி வந்த பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். கொலை குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தார். செல்போன் சிக்னல்களையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின்படி ஆட்டோ டிரைவர் சூரியபிரகாஷைப் பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரைக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சூரியபிரகாஷ் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.

பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு