Published:Updated:

இது கொலை அல்ல!

இது கொலை அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
இது கொலை அல்ல!

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், தற்காப்புக்காகவே அந்த நபரைக் கொலை செய்திருக்கிறார்

இது கொலை அல்ல!

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், தற்காப்புக்காகவே அந்த நபரைக் கொலை செய்திருக்கிறார்

Published:Updated:
இது கொலை அல்ல!
பிரீமியம் ஸ்டோரி
இது கொலை அல்ல!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண் ப்ளஸ் டூ வரை படித்தவர். காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது அவரது கனவு. காவலர் பணிக்கான தேர்வை எழுதிவிட்டு, தேர்வு முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், அவர் ஒரு கொலையாளியாக மாறியதுதான் துயரம். ஆனால், நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் அல்லவா... குற்றம்சாட்டப்பட்டவராக சிறைக்குச் செல்ல வேண்டிய நிலையில் அந்த இளம்பெண் இருக்க... ‘தன் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, தற்காப்புக்காகச் செய்த கொலை’ என்று காவல்துறை உயரதிகாரி அவரை விடுதலை செய்யவே... தமிழகம் முழுக்க பேசுபொருளாகியிருக்கிறது அந்தச் சம்பவம்!

இது கொலை அல்ல!
Srinivasan J

ஜனவரி 2-ம் தேதி மாலை 5:30 மணி... திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலையத்துக்கு ரத்தக்கறை படிந்த உடையுடன் வந்த அந்த இளம்பெண்ணைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். “என்ன நடந்தது?” என்று பதற்றத்துடன் போலீஸார் விசாரிக்க, நிதானமாக நடந்த சம்பவங்களை விவரித்தார் அந்த இளம்பெண். ‘‘கக்கூஸ் போறதுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமா போனேன். பின்னாலேயே வந்த என் சொந்தக்காரன் அஜித், என்னை முள்ளுக்காட்டுக்குள்ள இழுத்துட்டுப் போனான். போதையில வேற இருந்தான். கத்தியைக் காட்டி மிரட்டி என்னை பலாத்காரம் செய்ய முயற்சி செஞ்சபோது அவன்வெச்சிருந்த கத்தி கீழ விழுந்துருச்சு. எனக்கு வேற வழி தெரியலை. என்னைக் காப்பாத்திக்க, கத்தியை எடுத்து அவனைக் குத்திட்டேன். ஆனா, அவனைக் கொலை செய்யுற நோக்கமெல்லாம் எனக்கு இல்லை’ என்று கதறியிருக்கிறார்.

அஜித்
அஜித்

இளம்பெண் குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், கொலையாகிக் கிடந்த அஜித்தின் சடலத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இந்தக் கொலை பற்றிய தகவல் திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனுக்குத் தெரிவிக்கப்பட, விரைந்து வந்தவர், அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். தற்காப்புக்காகவே அந்த நபரை அந்த இளம்பெண் கொலை செய்திருக்கிறார் என்பதை உறுதிசெய்த எஸ்.பி அரவிந்தன், அந்தப் பெண்ணைக் கொலை வழக்கிலிருந்து விடுவித்தார்.

இது குறித்து சோழவரம் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம். ‘‘அந்த இளம்பெண்ணின் அப்பா ஒரு லாரி டிரைவர். அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டார்கள். அந்த இளம்பெண் தன் அம்மாவுடன் வசித்துவருகிறார். பலாத்காரம் செய்ய முயன்ற அஜித், அம்மாவழி உறவினர். டிரைவரான அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த இளம்பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்துவந்திருக்கிறார் அஜித். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த அந்த இளம்பெண்ணைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த அஜித் அதற்காக, கன்னத்தில் அறையும் வாங்கியிருக்கிறார். அந்தச் சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த அஜித்தின் மனைவி, குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு, அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அஜித் முயன்றுவந்திருக்கிறார். இந்த நிலையில்தான், கொலைச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது’’ என்றார்கள்.

அரவிந்தன்
அரவிந்தன்

திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனிடம் பேசியபோது, ‘‘முதலில் அந்தப் பெண்மீது கொலை வழக்கு (ஐ.பி.சி 302) பதியப்பட்டிருந்தது. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதால், தற்காப்புக்காகவே அந்த நபரைக் கொலை செய்திருக்கிறார் என்பதால், வழக்கை ஐ.பி.சி பிரிவு 100-ன் கீழ் மாற்றி அந்தப் பெண்ணை விடுதலை செய்திருக்கிறோம். வழக்கின் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’’ என்றார்.

உ.வாசுகி
உ.வாசுகி

இந்தச் சம்பவம் குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகியிடம் பேசியபோது, ‘‘ஒரு பெண் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக நடத்திய போராட்டத்தில் ஒரு மரணம் நிகழ்ந்திருக்கிறது. எனவே, தற்காப்பு என்கிற அடிப்படையில் பிரிவு 100-ஐப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை விடுதலை செய்தது மிகவும் சரியானது. வீட்டில் கழிப்பறை இல்லை என்ற பிரச்னையையும் இதில் முக்கியமாகப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே, மதுரையில் இதுபோல பலாத்காரம் செய்ய முயன்றவரைக் கொலை செய்த பெண், பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னுதாரணமும் இருக்கிறது. மகள்களைத் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, கணவன் என்றும் பாராமல் அவரை மனைவி கொலை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களிலுமே கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் கையில் கிடைத்ததை எடுத்துத் தாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்’’ என்றார்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ளல் ஆகாது பாப்பா –
மோதி மிதித்துவிடு பாப்பா


பாரதியாரின் வரிகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism