திருவள்ளூர் அருகேயுள்ள கீழநல்லாத்தூர் ஊராட்சி பல்லவன் திருநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் மனைவி ரேவதி. ராஜேஷ், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரின் சொந்த ஊர் செங்கல்பட்டு மாவட்டம், பிலாப்பூர் கிராமம். பொங்கல் பண்டிகையையொட்டி ராஜேஷ், தன்னுடைய குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குச் சென்றார். பின்னர் அவர் குடும்பத்தினருடன் வீட்டுக்குத் திரும்பினார்.

ராஜேஷின் மாமனார் சீனிவாசன் வீட்டின் பூட்டைத் திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வீட்டுக்குள் யாரோ இருக்கும் சத்தமும் கேட்டது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட சீனிவாசன், வீட்டுக்குள் தனியாகச் சென்றார். அப்போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் இரண்டு திருடர்கள் அமர்ந்து பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். சீனிவாசனைப் பார்த்ததும் திருடர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனடியாக சீனிவாசன், `திருடன்... திருடன்!' என்று சத்தம் போட்டபடி அவர்களைப் பிடிக்க முயன்றார்.
அதைக் கேட்டு ராஜேஷ், அவரின் மனைவி ரேவதி ஆகியோரும் வீட்டுக்குள் வந்தனர். இந்தச் சமயத்தில் கிடைத்தது வரை லாபம் எனப் பணத்தை கையில் எடுத்துக்கொண்டு இரண்டு திருடர்களும் தப்பினர். அப்போது திருடன் ஒருவரை சீனிவாசன் மடக்கிப் பிடித்தார். உடனே சீனிவாசனைத் தாக்கிய அந்தத் திருடன் தப்பி ஓட முயன்றான். அப்போது திருடன் அணிந்திருந்த வேட்டி சீனிவாசனின் கையில் சிக்கியது. அதனால் அந்தத் திருடன், வேட்டியை கழற்றிவிட்டு உள்ளாடையுடன் வெளியில் ஓடிவந்தான். அப்போது பைக்கை ஸ்டார்ட் செய்து தயார்நிலையில் இருந்த இன்னொரு திருடனின் பின்னால் அமர்ந்து உள்ளாடையுடன் தப்பிச் சென்றான்.

இது குறித்து ராஜேஷ், மணவாளநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். பின்னர் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அப்போது உள்ளாடையுடன் திருடன் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. எவ்வளவு பணம், நகை, பொருள்கள் கொள்ளைபோனது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஏற்கெனவே இந்தப் பகுதியில் அடிக்கடி கொள்ளைச் சம்பவம் நடந்ததால் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அது குறித்தும் விசாரணை நடந்துவரும் சூழலில்தான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது.