Election bannerElection banner
Published:Updated:

`பெரிய ரெளடி ஆகணும்னு ஆசை சார்' - 2 பேரைக் கத்தியால் குத்திவிட்டு போலீஸிடம் வசனம் பேசிய இளைஞர்கள்!

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

திருவள்ளூரில் ஊர் பேசும் அளவுக்குப் பெரிய ரௌடியாக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு தனியார் நிறுவன ஊழியர்களைக் கத்தியால் குத்தி அராஜகத்தில் ஈடுபட்ட நான்கு போதை ஆசாமிகளை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த ராஜபத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத், விஜயகுமார் ஆகிய இளைஞர்கள். இருவரும் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவருகின்றனர். சுழற்சி முறையில் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இவர்கள், கடந்த புதன்கிழமை அன்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து ஊத்துக்கோட்டையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

சுமார் 10 மணியளவில் திருவாலங்காட்டை அடுத்த கலியனூர் பகுதியை இருசக்கர வாகனத்தில் கடக்கும் போது, வாலிபர்கள் சிலர் நடு ரோட்டில் அமர்ந்துகொண்டு மது அருந்திக்கொண்டிருந்திருக்கின்றனர். சாலையின் குறுக்கே வழியை மறித்துக்கொண்டு நான்கு வாலிபர்கள் மது குடித்துக் கொண்டிருந்ததால் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த வினோத் வழிவிடுமாறு ஹாரனை அடித்திருக்கிறார். சரக்கடித்துக்கொண்டிருந்த போதை ஆசாமிகள் வினோத் ஹாரன் அடித்ததால் ஆத்திரமடைந்துள்ளனர். அதையடுத்து, வாகனத்தில் வந்த வினோத்தையும் விஜயகுமாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு இவர்களும் வாக்குவாதம் செய்ய, ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் தங்களிடம் குரல் உயர்த்திப் பேசிய இளைஞர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். அதில் படுகாயமடைந்த இளைஞர்கள் அலறித் துடித்துள்ளனர்.

சென்னை: மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொலை! - போலீஸாரிடம் கணவர் கூறிய அதிர்ச்சி காரணம்

அவர்களின் சத்தம் கேட்டுக் கூடிய கிராம மக்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த இளைஞர்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துவிட்டு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கத்தி ஆழமாகச் சதையைக் கிழித்திருந்ததால், உயர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் உத்தரவின்பேரில் திருவள்ளூர் போலீஸார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில், நேற்று திருவாலங்காடு பகுதியில் குற்றவாளிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அந்தப் பகுதியை திருவள்ளூர் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது, அவர்களைக் கண்டு தப்பியோட முயன்ற நான்கு குற்றவாளிகளில் போலீஸார் இருவரை மடக்கிப்பிடித்த நிலையில், இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றனர். அதில் இருவரும் தவறி விழுந்து படுகாயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குற்றவாளிகள் நான்கு பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்த போலீசார் இரண்டு பேரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு இரண்டு பேரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு விசாரித்ததில், தனியார் நிறுவன ஊழியர்களைக் கத்தியால் குத்தியது கலியனூர் சுரேஷ் (21), பாக்குப்பேட்டை சதீஷ் (25), ஏகாட்டூர் சோனால் (22), கடம்பத்தூர் பகவதி (19) எனத் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட போதை ஆசாமிகள்
கைதுசெய்யப்பட்ட போதை ஆசாமிகள்

கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை திருவள்ளூர் போலீஸார் விசாரித்ததில், நான்கு பேரும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. மேலும், கைதுசெய்யப்பட்ட நபர்கள், `எப்படியாவது ஏரியாவுல பெரிய ரௌடி ஆகணும்னு எங்களுக்கு ஆசை சார், இந்த மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள் செஞ்சாத்தான் எங்க பேரு எல்லாருக்கும் தெரியவரும். அதனாலதான் அந்த ரெண்டு பேரைக் கத்தியால குத்துனோம்' என்று போலீஸாரிடம் தெனாவட்டாக பதில் சொல்லியிருக்கின்றனர்.

விசாரணையை முடித்த போலீஸார் குற்றவாளிகள் நான்கு பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் சாலைகளில் மின் விளக்குகள் பொருத்தப்படாதது இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற ஒரு காரணமாக இருக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு