Published:Updated:

திருவள்ளூர்: `போலி பணி நியமன ஆணை; லட்சங்களில் பணம் பறிப்பு; 25 வயது இளைஞர் கைது!'

கைதான இளைஞர்
கைதான இளைஞர்

இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்சங்களைச் சுருட்டிக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரை அடுத்த, நடுக்குத்தகை கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகன் பார்த்தசாரதி (21). பார்த்தசாரதி கடந்தாண்டு தமிழகக் காவல்துறையில், இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வினை எழுதிவிட்டு, தேர்வு முடிவிற்காகக் காத்திருந்தார். இந்நிலையில், பார்த்தசாரதியிடம் தன்னை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவராகக் காட்டிக்கொண்ட திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் காலனியைச் சேர்ந்த அரவிந்தன் (25) என்ற இளைஞர், பார்த்தசாரதியிடம் எழுத்துத் தேர்வு குறித்துப் பேசிவிட்டு, அவரின் தேர்வு பதிவெண் மற்றும் விவரங்களைப் பெற்றுச் சென்றுள்ளார்.

பின்னர், சில நாள்களுக்குப் பிறகு பார்த்தசாரதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அரவிந்தன், நீங்கள் இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறிவிட்டு, கவலைப்பட வேண்டாம் இரண்டாம் நிலை காவலர் வேலை கிடைக்காமல் போனாலும் உங்களுக்கு நான் திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறினார். அரவிந்தன் கூறியதை உண்மை என்று நம்பிய பார்த்தசாரதி காவலர் பணி எப்படியும் கிடைத்தாக வேண்டும் என்ற ஆசையில் அரவிந்தனைச் சந்தித்து நேரிலும், அவரது வங்கிக் கணக்குகளிலுமாக 4,67,000 ரூபாய் கொடுத்திருக்கிறார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அரவிந்தன் போலியாகப் பணி நியமன ஆணையைத் தயாரித்து அதைப் பார்த்தசாரதியிடம் கொடுத்தார். பின்னர், பார்த்தசாரதி அரவிந்தன் வழங்கிய பணி நியமன ஆணை குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது அது போலி என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து, அரவிந்தனிடம் தொலைபேசியில் முறையிட்டிருக்கிறார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக  மோசடி..!
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி..!
விகடன்

அரவிந்தன் இணைப்பைத் துண்டித்து விட்டு பார்த்தசாரதியின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்திருக்கிறார். பார்த்தசாரதி உடனடியாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி புகாரளித்திருக்கிறார். மேலும், தனக்கு அரவிந்தன் அனுப்பிய போலி பணி நியமன ஆணையின் நகலையும் வாட்ஸ்அப் மூலமாகக் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இளைஞரின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்குப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி தலைமையில், சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு வேலை வாங்கித் தருவதாக இளைஞரை ஏமாற்றிய அரவிந்தனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

திருத்தணி: `அரசு வேலை ஆசை; பல லட்சம் ரூபாய் மோசடி!' - முகநூல் விளம்பரத்தால் சிக்கிய நபர்

மேலும், அரவிந்தன் வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி, இரண்டு சிம் கார்டுகள், அரசு வேலைக்கான படிவங்கள் மற்றும் போலி பணி நியமன ஆணைகள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரவிந்தன் 2020-ம் ஆண்டு தமிழக ஊர்காவல் படையில் சேர விண்ணப்பித்து இருந்ததாகவும், அது தொடர்பாக அடிக்கடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து சென்றபோது அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.

அரசு ஊழியர்களுடனான பழக்கத்தைத் தவறான வழியில் பயன்படுத்திக்கொண்ட அரவிந்தன், தன்னை காவல்துறை ஊழியர் என்று வெளியில் காட்டிக்கொண்டு படித்து விட்டு வேலை தேடித் கொண்டிருக்கும் இளைஞர்களிடம் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக இதுவரை 10 பேரையும், தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 8 பேரையும் என மொத்தம் 18 பேரை ஏமாற்றி பண பறிப்பில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அரவிந்தனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

இளைஞர் ஒருவர் காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாக ஏராளமானோரை ஆசை காட்டி ஏமாற்றியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கைதாகி இருக்கும் இளைஞருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என்று மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு