Published:Updated:

`இளம்பெண்ணிடம் அத்துமீறல்; தற்காப்பு முயற்சியில் கொலை!'- பெண்ணை விடுவித்த திருவள்ளூர் எஸ்.பி

கொலை
கொலை ( representational image )

மீஞ்சூர் அருகே தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரைக் கணவருடன் சேர்ந்து அடித்துக் கொன்ற இளம்பெண்ணை, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 100-ன் கீழ் விடுதலை செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வழுதிகைமேடு ஏரிப்பகுதியில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மணி என்பவருக்குச் சொந்தமான மீன் பண்ணை அமைந்துள்ளது. உரிமையாளர் மணி சென்னையில் வசித்துவரும் நிலையில், திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த பூங்காவனம் (26), அவரின் மனைவி அமுதா (21) இருவரும் மீன் பண்ணையில் கொட்டகை அமைத்துத் தங்கிப் பணிபுரிந்துவருகின்றனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மணியின் மீன் பண்ணை அமைந்துள்ள ஏரிப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் பாபுவுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். பின்னர் பாபு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மீஞ்சூர் போலீஸார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
representational image

மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வடிவேல் முருகன் தலைமையில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், உயிரிழந்த இளைஞரின் உடல் மீன் பண்ணைக்கு அருகிலிருந்ததால் பண்ணையில் பணி புரிந்துவந்த இளம்பெண் அமுதாவிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது அமுதா ஒருவித பதற்றத்துடன் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். அதனால், போலீஸார் அமுதாவின் கணவர் பூங்காவனத்தை அழைத்திருக்கின்றனர். ஆனால், அமுதா தன் கணவர் ஊருக்குச் சென்றுவிட்டதாக பதிலளிக்கவே விசாரணைக்கு வந்த போலீஸாருக்குச் சந்தேகம் வலுத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மீஞ்சூர் போலீஸார் இளம்பெண் அமுதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அதில் அமுதா பல திடுக்கிடும் விஷயங்களைப் போட்டுடைத்திருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக மீஞ்சூர் போலீஸாரிடம் பேசினோம். ``மீன் பண்ணைக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாங்கள் விசாரிக்கத் தொடங்கியதே அந்த மீன் பண்ணையில்தான். அப்போதுதான் அமுதாவிடம் விசாரித்தோம். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அதேபோல், சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் வரை மீன் பண்ணையிலிருந்த அவரின் கணவர் பூங்காவனம் விசாரணையின்போது அங்கு இல்லாதது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அமுதாவிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பல்வேறு விஷயங்கள் தெரியவந்தன. அமுதா தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற வடமாநில நபரிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். அப்போது அமுதாவின் கணவரும் விரைந்து வந்து அந்த இளைஞரைத் தாக்கியிருக்கிறார். அந்த நபரும் பதிலுக்கு இருவரையும் தாக்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் தம்பதியிடமிருந்து அந்த நபர் தப்பி ஓட முயன்றிருக்கிறார். அமுதாவும் அவருன் கணவரும் அவரை விரட்டிக்கொண்டு ஆத்திரத்தில் ஓடியிருக்கின்றனர். அப்போது, இருட்டில் அந்த நபர் கால் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். அதில் தலையில் பலமாக அடிபட்டிருக்கிறது. அதேபோல், ஓடி வந்த வேகத்தில் அமுதாவின் கணவர் பூங்காவனமும் அந்த நபர் மீது பலமாக விழுந்திருக்கிறார். அதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

மீஞ்சூர் காவல் நிலையம்
மீஞ்சூர் காவல் நிலையம்

பின்னர், இருவரும் சேர்ந்து உடலை ஏரிப்பகுதிக்குள் போட்டுவிட்டு மீன் பண்ணைக்குத் திரும்பியிருக்கின்றனர். அதையடுத்து, அமுதாவை மட்டும் அங்கு விட்டுவிட்டு பூங்காவனம் அங்கிருந்து தலைமறைவாகியிருக்கிறார். தற்போது விசாரணையின் மூலம் தம்பதியைக் கைதுசெய்திருக்கிறோம். இளைஞர் கொலை வழக்கில் அமுதா, அவரின் கணவர் பூங்காவனம் ஆகியோர் மீது சட்டப்பிரிவு 100-ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தோம். இந்தநிலையில், தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சட்டப்பிரிவு 100-ன் கீழ் இளம்பெண் அமுதாவை விடுதலை செய்திருக்கிறார்" என்றனர்.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தில் இதே போன்று தவறாக நடந்துகொள்ள முயன்ற உறவினர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் இளம்பெண் ஒருவரை முன்னால் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு