Published:Updated:

``பெண்ணைக் காப்பாற்ற உயிரைத் தியாகம் செய்த ஏக்கேஷ்!"- கைதான ஆட்டோ டிரைவரின் அதிர்ச்சிப் பின்னணி

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்டோவில் கடத்த முயன்ற பெண்ணைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் ஏக்கேஷ் உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் கேசவன் ஒரு மாற்றுத்திறனாளி என்கின்றனர் போலீஸார்

ஏக்கேஷ்
ஏக்கேஷ்

திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்சேரி கிராமம், மாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரின் மகன் ஏக்கேஷ் (21). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 25) இரவு ஏக்கேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் 2 பைக்கில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் பயணித்த பெண் ஒருவர், தன்னைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற ஏக்கேஷ், உயிரிழந்தார். இந்தச் செய்தியைப் படித்தவர்கள் ஏக்கேஷின் தியாகம் குறித்து கண்கலங்கினர்.

ஏக்கேஷ்
ஏக்கேஷ்

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த மப்பேடு போலீஸார், ஆட்டோ டிரைவர் கேசவனை கடந்த 28-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில் கேசவன் மற்றும் ஏக்கேஷின் நண்பர்கள் புதிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். ஏக்கேஷின் நண்பரான 17 வயதாகும் வினித் போலீஸாரிடம்,``நான் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பெயின்டிங் வேலை செய்துவருகிறேன். சம்பவத்தன்று, நண்பர்களோடு பைக்கில் சென்றேன். பைக்கை ஏக்கேஷ் ஓட்ட நானும் சார்லின்பனும் பின்னால் அமர்ந்திருந்தோம். இன்னொரு பைக்கை பிராங்கிலின் ஓட்ட பின்னால் ஈஸ்டர் பிரேம்குமார் அமர்ந்திருந்தார்.

சத்தரை தரைப்பாலம் மீது நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது மப்பேடு பகுதியிலிருந்து எங்களுக்குப் பின்னால் வேகமாக ஒரு ஆட்டோ வந்தது. பதிவு எண் தெரியாத அந்த ஆட்டோ பைக்கின் மீது மோதியது. ஆனால், டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அதனால் பைக்கிலிருந்து நாங்கள் கீழே விழுந்தோம். எனக்கு காலில் காயம் ஏற்பட்டது. பைக்கை ஓட்டிய ஏக்கேஷ், இடது புற நெற்றி, இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதோடு சுயநினைவிழந்தார். சார்லின்பனுக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

ஏக்கேஷ்
ஏக்கேஷ்
சொ.பாலசுப்பிரமணியன்
எப்.ஐ.ஆர்.
எப்.ஐ.ஆர்.

இன்னொரு பைக்கில் வந்த பிராங்கிளினுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. ஈஸ்டர் பிரேம்குமாருக்கு கை, கால், புருவம் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த எங்களை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்தனர்" என்று கூறியுள்ளார். அதன்அடிப்படையில் 279, 337 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மப்பேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வினித் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் ஆட்டோவில் இருந்த பெண்ணுக்கு உதவி செய்த தகவல் இல்லை.

ஆனால் ஏக்கேஷ், 27-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, கடம்பத்தூர் அருகே உள்ள பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கேசவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் கடத்தப்பட்ட ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயன்றபோதுதான் ஏக்கேஷ், உயிர்த்தியாகம் செய்த தகவல் வெளியானது. இதையடுத்து, ஏக்கேஷின் செயலுக்கு காவல்துறையினரும் பொதுமக்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

ஏக்கேஷ் பெற்றோர்
ஏக்கேஷ் பெற்றோர்
சொ.பாலசுப்பிரமணியன்

மப்பேடு போலீஸார் கூறுகையில்,``ஆரம்பத்தில் கடம்பத்தூர் ஆட்டோ ஸ்டாண்டில் கேசவன் ஆட்டோ ஓட்டிவந்துள்ளார். ஆட்டோ ஓட்டும்போது அவர் விபத்தில் சிக்கி வலது காலை இழந்துள்ளார். இதற்கிடையில், கேசவன் மீது பெண் பயணி ஒருவர் குற்றம்சாட்டினார். அதன்பிறகு அந்த ஆட்டோ ஸ்டாண்டில் கேசவன் ஆட்டோ ஓட்டவில்லை. மற்ற இடங்களில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று மப்பேடு பகுதியிலிருந்து கடம்பத்தூருக்கு ஆட்டோ ஓட்டிவந்துள்ளார் கேசவன். அப்போது அழகுக்கலை நிபுணரான பெண் ஒருவர் கேசவனின் ஆட்டோவில் பயணித்துள்ளார். தனியாக இருந்த அவரை, கேசவன் கடத்த முயன்றபோதுதான் ஏக்கேஷ், உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த அந்தப் பெண்ணுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

விசாரணையின்போது கேசவன் போலீஸாரிடம், `வீட்டில் எனக்கு பிரச்னை. அதனால்தான் அந்தப் பெண்ணை கடத்த முயன்றேன்' என்று கூறியுள்ளார்.

`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு!' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர்

அதற்கு போலீஸார், உன்னுடைய இந்தச் செயலால் ஏக்கேஷ் என்ற இளைஞன் உயிரிழந்துவிட்டாரே என்று கேட்டதற்கு, ``தவறு செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். பெண்ணைக் காப்பாற்ற சென்ற இடத்தில் ஏக்கேஷின் நண்பன் பிராங்கிளினுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டதால் படுத்தபடுக்கையாகியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களின் இந்தச் செயலை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் பாராட்டியுள்ளார்.