Published:Updated:

`12வது வார்டில் போட்டியிடக்கூடாது!' - தி.மலை பா.ஜ.க பிரமுகருக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்

உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட, மனைவியை சுயேச்சையாக நிறுத்திய பா.ஜ.க பிரமுகரின் காரை, மர்மநபர்கள் இரவோடு இரவாகத் தீவைத்து எரித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

தீவைக்கப்பட்ட கார்
தீவைக்கப்பட்ட கார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அகரகொரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்பாபா. இவர், பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டப் பொருளாதாரப் பிரிவு மாவட்டத் தலைவராகப் பதவியில் உள்ளார். பல ஆண்டுகளாக பா.ஜ.கவில் பல பொறுப்புகளை வகித்தவர். இந்நிலையில், தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரகொரக்கோட்டை, 12-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பகுதியை பா.ஜ.க வுக்கு ஒதுக்கித்தரும்படி, அ.தி.மு.க கூட்டணியிடம் கேட்டிருந்தார். ஆனால், அந்தப் பகுதியை ஒதுக்கித் தராமல் 8-வது வார்டான வெட்டால் பகுதியை பா.ஜ.வுக்கு, அ.தி.மு.க கூட்டணியில் ஒதுக்கப்பட்டது.

கார்
கார்

இதனால், கோபமடந்த சாய்பாபா, தனது மனைவி புவனேஸ்வரியை 12-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய வைத்தார். அதே,12-வது வார்டில் அ.தி.மு.கவைச் சேர்ந்த தங்கராஜ், தி.மு.கவைச் சேர்ந்த அமுதா என 13- பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மிக முக்கியமான ஆட்கள் அனைவரும் 12-வது வார்டையே குறிவைத்து மனுத் தாக்கல் செய்துள்ளதால், இந்த வார்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த வார்டாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சாய்பாபாவுக்கு, கடந்த 8-ம் தேதி செல்போனில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள், `12-வது வார்டில் நீ போட்டியிடக் கூடாது என்றும், பா.ஜ.கவிலிருந்து விலக வேண்டும்' என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். `அப்படி மீறி 12-வது வார்டில் போட்டியிட்டால், கொலை செய்துவிடுவோம்' என்றும் மிரட்டியுள்ளனர். அதுகுறித்து தெள்ளார் காவல் நிலையத்தில் சாய்பாபா அப்போது புகாரளித்திருந்தார்.

இந்நிலையில், 19-ம் தேதி இரவு 2-மணியளவில், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கத்தி கூச்சல் போட்டுள்ளனர். அதைக் கேட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாய்பாபா மற்றும் அவர் குடும்பத்தினர் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது, அவருடைய மகேந்திரா சொகுசு கார் எரிந்துகொண்டிருந்தது.

தீவைத்து எரிக்கப்பட்ட கார்
தீவைத்து எரிக்கப்பட்ட கார்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சாய்பாபா, காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தேர்தலில் போட்டியிடக்கூடாது என செல்போனில் மிரட்டிய மர்ம நபர்களே காருக்குத் தீவைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.