Published:Updated:

`நம்பி வந்தவளைக் கொன்று, நகையை விற்றுக் குடித்தேன்!’- காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்

சிவரத்தினத்துடனான உறவை முறித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால், அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்தார். செலவுக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு நச்சரித்தார்.

ஏழுமலை
ஏழுமலை

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் ரயில் நிலைய தண்டவாளத்தில், கடந்த மாதம் 20-ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதுதொடர்பாக, ஆம்பூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இறந்த பெண், திருச்சி மாவட்டம் சமயபுரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகள் சிவரத்தினம் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, சிவரத்தினத்தின் செல்போன் எண்ணை ஆய்வுசெய்தனர். ஒரே எண்ணிலிருந்து தொடர்ந்து அதிக அழைப்புகள் வந்திருப்பதை அறிந்தனர். அந்த எண்ணை, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (27) என்பவர் பயன்படுத்திவருவதைக் கண்டுபிடித்தனர்.

இளம்பெண்ணின் சடலம்
இளம்பெண்ணின் சடலம்

வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த ஏழுமலையை போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிவரத்தினத்தைக் கொலை செய்ததை ஏழுமலை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில், ஏழுமலை பணம் கேட்டு, சிவரத்தினம் தராத ஆத்திரத்தில் கொலை செய்ததாகத் தகவல் பரவியது.

இந்தநிலையில், ஏழுமலை கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாகப் போலீஸார் கூறுகிறார்கள். போலீஸில் ஏழுமலை தெரிவித்த வாக்குமூலத்தில், ``எனக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை தேடி ஆம்பூர், வாணியம்பாடியில் அலைந்தேன். பிறகு, திருப்பூருக்குச் சென்று ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அதே கம்பெனியில்தான் சிவரத்தினமும் வேலை செய்தார். அப்போதுதான் முதல் முறையாக அவரைப் பார்த்தேன். அழகாக இருந்ததால் அவர் மீது ஆசைப்பட்டுப் பேச ஆரம்பித்தேன். 

சிவரத்தினத்துக்கும் தஞ்சை மாவட்டம் மேலமேட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமசாமிக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 12 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில ஆண்டுகளுக்கு முன்பே கணவரைப் பிரிந்த சிவரத்தினம் சமயபுரத்தில் உள்ள தன் அண்ணன் பாஸ்கரனின் வீட்டில் மகனை விட்டுவிட்டு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்ததாக என்னிடம் கூறினார். தனிமையில் இருந்த சிவரத்தினத்துக்கும் என் மீது பிரியம் ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல் நெருக்கமாக இருந்தோம். நான் செலவுக்குப் பணம் கேட்கும்போதெல்லாம் சிவரத்தினம்தான் கொடுப்பார். இந்தநிலையில், சில காரணங்களால் நான் வேலையிலிருந்து விலகி, என் வீட்டுக்கு வந்துவிட்டேன். 

சிவரத்தினம்
சிவரத்தினம்

அதன்பிறகு, சிவரத்தினத்துடனான உறவை முறித்துக்கொள்ள நினைத்தேன். ஆனால், அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்தார். செலவுக்காகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு நச்சரித்தார். இந்தநிலையில்தான், கடந்த மாதம் 19-ம் தேதி என் ஊருக்கு சிவரத்தினம் வந்தார். அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செங்கம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். அந்த நேரத்திலும் பணம் கேட்டுத் தொல்லை செய்தார். அங்கேயே அவரைப் போட்டுத்தள்ள திட்டமிட்டேன். என் ஊருக்கு அருகில் கொலை செய்யவேண்டாம் என நினைத்து, ஆசையாகப் பேசுவதுபோல் நடித்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு பைக்கில் அழைத்துச் சென்றேன். அங்கும் சரியான இடம் கிடைக்கவில்லை. 

எங்கு பார்த்தாலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் பகுதிக்கு அழைத்துச்சென்று யாரும் இல்லாத ஓர் இடத்தில் சிவரத்தினத்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். கழுத்தில் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக்கொண்டு சடலத்தைத் தண்டவாளத்தில் வீசிவிட்டுத் தப்பிவந்தேன். அந்த நகைகளைத் திருவண்ணாமலையில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டேன். போலீஸ் என்னை நெருங்காது என நினைத்து அந்தப் பணத்தில் மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்த நிலையில் மாட்டிக்கொண்டேன்’’ என்று கூறியிருப்பதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து, ஏழுமலையைப் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் கைதான காதலன் ஏழுமலை
கொலை வழக்கில் கைதான காதலன் ஏழுமலை

சிவரத்தினத்தின் உடலை வாங்குவதற்காக அவரின் உறவினர்கள் ஆம்பூர் வந்திருந்தனர். நாள்கள் கடந்த காரணத்தினால் இளம்பெண் சிவரத்தினத்தின் உடலை அடையாளம் தெரியாத பிணமாகக் கருதி சில நாள்களுக்கு முன்பே வேலூர் அடுக்கம்பாறை அருகில் அடக்கம் செய்துவிட்டதாக காவல்துறையினர் கூறினர்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள், `கடைசி வரையில் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லையே’ என அழுதுபுரண்டனர். காவல்துறையினர் அவர்களைச் சமாதானம் செய்த பிறகு, சிவரத்தினம் புதைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஈமச்சடங்கு செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்துபிடிக்க ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு, சமயபுரம் போலீஸார் உறுதுணையாக இருந்தனர்.