Published:Updated:

`கரைபுரண்டோடிய 1,640 லிட்டர் சாராயம்!' -திருவண்ணாமலையில் இரண்டே நாளில் சிக்கிய 46 பேர்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

விகடன் செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக, இரண்டே நாளில் 46 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பனை செய்வதும் தங்கு தடையின்றி நடக்கிறது என்று ஜூனியர் விகடனில் `ஆறாய் ஓடும் சாராயம்! திணறும் திருவண்ணாமலை காவல்துறை!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம். அதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில், சாராயம் காய்ச்சியவர்கள் விற்பனை செய்தவர்கள் என இரண்டே நாளில் 46 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடமிருந்து 1,640 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு, 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அழிக்கப்பட்ட சாராய ஊறல்
அழிக்கப்பட்ட சாராய ஊறல்

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் டெல்டா தனிப்பிரிவு போலீஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், ஆரணி தாலுக்கா, ஒட்டம்பட்டு பகுதியில் 400 லிட்டர் கள்ளச் சாராய ஊறல், அரசாணி பாளையம் பகுதியில் 150 லிட்டர் சாராயம் ஊறல், வசந்தபுரம் பகுதியில் 950 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், செங்கம் தாலுக்கா வலையாம்பட்டு பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல், ஜமுனாமரத்தூர் பகுதியில் சாராய ஊறல், கண்ணமங்கலம் பகுதியில் 20 லிட்டர் கள்ளச்சாராயம், தண்டராம்பட்டு தாலுக்கா தென்முடியனூர் பகுதியில் 50 லிட்டர் சாராயம், தானிப்பாடி பகுதியில் 120 லிட்டர் சாராயம்,

போளூர் சுற்றுவட்டாரப் பகுதியில் 230 லிட்டர், கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா காரப்பட்டு பகுதியில் 40 லிட்டர் கள்ளச்சாராயம், ஜமுனாமரத்தூர் தாலுக்கா, நம்மியம்பட்டு பகுதியில் 10 லிட்டர் கள்ளச்சாராயம், கலசப்பாக்கம் தாலுக்கா மேல்வன்னியனூரில் 40 லிட்டர் சாராயம், சேத்பட் பகுதியில் 20 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 25 லிட்டர் கள்ளச்சாராயம் என மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டை நடத்தியதில், 46 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

அழிக்கப்பட்ட சாராய ஊறல்
அழிக்கப்பட்ட சாராய ஊறல்

அவர்களிடமிருந்து 3,830 சாராய ஊறல்கள் அழிக்கப்பட்டு, 1,640 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு, 13 இருசக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கரம் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் பேசியபோது, ``தொடர்ந்து அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறது காவல்துறை. சாராயம் காய்ச்சுபவர்களையும் விற்பனை செய்பவர்களையும் சல்லடைபோட்டுத் தேடி கைது செய்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு