Published:Updated:

திருவாரூர்: அதிகரிக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள்; போதைப்பொருள்களே காரணம் என ஆதங்கப்படும் மக்கள்!

போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், எதற்கும் துணிந்தவர்களாக, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

,திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாகக் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துவருவது பொதுமக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருக்கிறார்கள். கஞ்சா, கள்ளச்சாராயம் புழக்கம் திருவாரூர் மாவட்டத்தில் அதிகரித்துவருவதால் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையானவர்கள், எதற்கும் துணிந்தவர்களாக, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கவலைப்படுகிறார்கள். இதைத் தடுத்து நிறுத்தி, இந்தப் பகுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தமிழக அரசும், காவல்துறையும் தனி கவனம் செலுத்தி, சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

திருவாரூர்
திருவாரூர்

இது குறித்து நம்மிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ``அண்மையில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மாலை வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச.தமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வன்செயலில் ஈடுபட்ட அனைவரும் இளைஞர்களே. கொலை செய்யும் நோக்கம் வரும் அளவுக்குப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் சகிப்புத்தன்மை இல்லாமல் இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டும், நீதிமன்றங்களில் சரணடைந்தும் சிறையில் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்து ஒரு சில தினங்களில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அகரதிருநல்லூர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கிடாரங்கொண்டான் என்ற பகுதியில் அவர் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் இளைஞர்களாகவே இருக்கின்றனர்.

திருவாரூர்: இளைஞர் கொலை; சிக்கிய ஆதாரங்கள்; பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கோர்ட்டில் சரண்!

படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி ஊர்வலத்தின்போது வழி நெடுகிலும், குறிப்பாக பவித்திரமாணிக்கம் வீதியில் கடைகளையும், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதும் இளைஞர்கள்தான். மாவட்டக் காவல்துறை அவ்வப்போது நடத்தக்கூடிய தேடுதல் வேட்டையில் குறிப்பாக, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது, மதுபாட்டில்களை கடத்துவது, கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வது, பெண்கள், குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைதாவது என அனைத்துக் குற்றங்களிலும் ஈடுபடக்கூடியவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களாகவே இருக்கின்றனர். அண்மைக்காலமாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்து ஓர் ஆய்வு மேற்கொண்ட போது 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்தது. இதற்கு முக்கியமான காரணம் தங்கு தடையில்லாமல் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்படுவதும், அதை உட்கொண்டுவிட்டு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக, கடந்த ஒன்றரை வருடமாக, இங்கிருக்கும் கிராமப்புறக் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இவர்கள் ஆற்றங்கரை உள்ளிட்ட பொது இடங்களில் அமர்ந்து போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகிவருகிறார்கள்.

சுந்தரமூர்த்தி
சுந்தரமூர்த்தி

இந்த நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. தமிழக அரசும், தமிழக காவல்துறையும் அதிகரித்துவரும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தவும், இதில் ஈடுபடக்கூடிய இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும். தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி ஆண்டுக்கு பத்து லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த விரைந்து செயல்பட வேண்டும். சட்டமன்றத் தொகுதிவாரியாக திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை உருவாக்கி, படித்த இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சட்டம், ஒழுங்கை மேம்படுத்த காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் வெட்டிக் கொலை! - நீடாமங்கலத்தில் பதற்றம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு