Published:Updated:

போலீஸ் ஸ்டேஷனில் அரிவாளுடன் டிக்டாக்!- காவலர்களைப் பதறவைத்த இளைஞர்கள்

குணநிலா தி
க.சதீஷ்குமார்

பெண்களிடம் தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வந்த மூன்று இளைஞர்கள் காவல் நிலையம் முன்பு அரிவாளுடன் டிக்டாக் வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையம் முன்பு டிக்டாக்
காவல் நிலையம் முன்பு டிக்டாக்

ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒன்றின் மீது அதீத ஆர்வமும் ஈடுபாடும் இருக்கும். அப்படி இந்த காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மீது அதிக ஆர்வம் உண்டு. குறிப்பாக செயலிகளில் டப்ஸ்மாஷ், டிக்டாக் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் தங்களைப் பிரபலப்படுத்துவற்காக புதிய புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

இந்தநிலையில், திருவாரூர் மாவட்டம் தலையாமங்கலம் கிராமத்தில் காவல் நிலையத்தின் முன்பே அரிவாளோடு டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஐயப்பன், ராஜவேல், பிரதீப் ஆகிய மூவரும் ஏற்கெனவே கைதாகி சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இதற்காக தினமும் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்துகொண்டிருந்தனர். இன்று மூன்று பேரும் கையெழுத்திட வந்தபோது அங்கிருந்த உதவிக் காவலர் ஒருவர், இவர்களிடம் அரிவாளை கையில் கொடுத்து அங்குள்ள கருவேல மரங்களை வெட்டும்படி கூறியுள்ளார். எல்லாவற்றையுமே பொழுதுபோக்காக பார்க்கும் இளைஞர்களுக்கு, இதுவும் வேடிக்கையான ஒரு செயலாக, அந்த அரிவாளைக்கொண்டு காவல் நிலையத்தின் முன்பே டிக்டாக் வீடியோக்களைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். இது பார்ப்பதற்கு அங்கிருந்த அனைவரையும் அச்சுறுத்தும் விதமாகவே இருந்திருக்கிறது.

அரிவாளுடன் டிக்டாக்
அரிவாளுடன் டிக்டாக்

இவர்களின் நடவடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த காவலர்கள் உடனடியாக இவர்களைக் கைது செய்தனர். இவர்களின் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்நிலையத்தின் முன்பே இதுபோன்ற செயல்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். ``ஏற்கெனவே கைது செய்து தண்டனை அனுபவிப்பதற்காகதான் இங்கு வந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விளையாட்டுத்தனமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை எப்படி சீர்படுத்துவது என்று நினைக்கும்பொழுதே மிகவும் கவலையாக இருக்கிறது" என்கின்றனர் காவல்துறையினர்.