Published:Updated:

புதுச்சேரி: கோடிக்கணக்கில் ஏலம்; பதுக்கப்பட்ட கோயில் சிலைகள்! சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

புதுச்சேரி மாநிலத்தில் மீட்கப்பட்ட சிலைகள்
புதுச்சேரி மாநிலத்தில் மீட்கப்பட்ட சிலைகள்

புதுச்சேரி சட்டப்பேரவையை ஒட்டியிருக்கும் ஒரு வீட்டிலிருந்து பழைமைவாய்ந்த 74 சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடியாகப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழைமையான கோயில் சிலைகளைக் கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்றுவந்த குற்றச்சாட்டில் தீனதயாளன் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரளித்த தகவலின் அடிப்படையில், கடந்த 2016-ம் ஆண்டு புதுச்சேரி கோலாஸ் நகரில் மேரி தெரசா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. அங்கு பதுக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள தொன்மையான 11 சிலைகளைப் பறிமுதல் செய்தனர், அப்போதைய சிலைக் கடத்தல் தடுப்பு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுடன் சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார்
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளுடன் சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார்

இந்தநிலையில், புதுச்சேரி ரோமன் ரொலான் வீதியிலுள்ள ஒருவரது வீட்டில் பழைமையான சிலைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்குத் தகவல் சென்றது. அதனடிப்படையில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார், நேற்று அந்த வீட்டில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 74 சிலைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். அவை அனைத்தும் ஐம்பொன், உலோகம் மற்றும் கற்களால் வடிவமைக்கப்பட்ட பழைமையான சிலைகள்.

40 ஆண்டுகளுக்குப்பின் இங்கிலாந்திலிருந்து அனந்தமங்கலம் திரும்பும் ராமர் சிலை... கிடைத்தது எப்படி?

முதற்கட்ட விசாரணையில் வீட்டின் உரிமையாளரான ஜான் பால் ராஜரத்தினம், கோலாஸ் நகர் மேரி தெரசாவின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், ``புதுச்சேரியிலுள்ள ஜான்‌ பால் ராஜரத்தினம் என்பவரின் வீட்டில் தமிழகத்திலுள்ள பழைமைவாய்ந்த கோயில்களிலிருக்கும் சிலைகளை மறைத்துவைத்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்
தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்

அதையடுத்து தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஒப்புதலின் அடிப்படையில், அந்த வீட்டில் ஆய்வு செய்வதற்காகக் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்றோம். அதன் பிறகு, வீட்டின் உரிமையாளர் ஜான் பால் ராஜரத்தினம் மற்றும் இந்து அதிகாரிகள் முன்னிலையில் சோதனை மேற்கொண்டோம்.

அப்போது 74 கடவுள் சிலைகள் அங்கு பதுக்கிவைத்திருந்ததைக் கண்டுபிடித்தோம். இதில், ஐம்பொன் மற்றும் உலோகத்தாலான 60 சிலைகளும், கற்களால் வடிவமைக்கப்பட்ட 14 சிலைகளும் கிடைத்திருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் வீடுகளில்வைத்து வழிபடும் சிலைகள் அல்ல. அவை அனைத்தும் கோயில் வழிபாட்டுக்கு வைக்கப்படும் உற்சவர் சிலைகள். அதனால், இவை அனைத்தும் கடத்தப்பட்ட சிலைகளாக இருக்கலாம்.

`22 சிலைகள்; 48 நாள்கள்; பல கோடி மதிப்பு!' - கோயில் கொள்ளை வழக்கில் அதிரடி காட்டிய தஞ்சை போலீஸார்

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்தெந்தக் கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்டன என்று விசாரணை செய்துவருகிறோம். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கோயில்களில் சிலைகளைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏலத்தின் மூலமே இந்த சிலைகள் விற்கப்படுகின்றன. அதன்படி, ஒரு சிலை 2 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரை விற்கப்படும். அப்படிப் பார்த்தால் தற்போது கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு