Published:Updated:

கிஷோர் கே.ஸ்வாமி கைது: தி.மு.க தலைவர்கள் பற்றி அவதூறு கருத்துகள்... 3 பிரிவுகளின் கீழ் வழக்கு!

கிஷோர் கே.சுவாமி
கிஷோர் கே.சுவாமி ( facebook - kishore k.swamy )

திமுக தலைவர்கள் குறித்து  அவதூறு கருத்துகளை  சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  தற்போது கிஷோர் கே.ஸ்வாமி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

திமுக-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐடி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10-ம் தேதி காவல்துறையினரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் ரவிச்சந்திரன், "தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்தும், தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் கிஷோர் கே. ஸ்வாமிமீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கைது
கைது

ரவிச்சந்திரன் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட சங்கர் நகர் போலீஸார், கிஷோர் கே.ஸ்வாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 153-கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல் மற்றும் 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து தாம்பரம் கிளை நீதிமன்றத்தில் கிஷோர் கே.ஸ்வாமி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு, அவரை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அதையடுத்து, போலீஸார் கிஷோர் கே.ஸ்வாமியைச் சென்னை, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு பெண் பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்ந்து, அவதூறாக விமர்சித்ததற்காக கிஷோர் கே.ஸ்வாமி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு