Published:Updated:

`8 ஆண்டுகளுக்கு முன்பே புகார்; தப்பிய ஜெயக்குமார்!' - அதிர்ச்சி கொடுத்த கைதியின் தகவல் #TNPSC

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில், முன்னதாகக் கைதான ஓட்டுநர் தரப்பு வழக்கறிஞர்கள், அவர் சார்பாகப் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ள விவகாரம், மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியான பிறகே இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது, அதன்பிறகு குரூப் 2 தேவு, காவலர்கள் தேர்வு எனப் பல அரசுத் தேர்வுகளில் தொடர் முறைகேடு நடந்துள்ளதாகத் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

தேர்வு
தேர்வு
மாதிரி புகைப்படம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக, தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரத்தில் புரோக்கர்கள், அதிகாரிகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள் உட்பட, 20-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் புரோக்கர் ஜெயக்குமார் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றி ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர் சிபிசிஐடி அதிகாரிகள்.

இந்நிலையில், இதே டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக 2012-ம் ஆண்டு கைதான ஒரு சிறைக்கைதி, தன் வழக்கறிஞர்கள் மூலம் தற்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள், ``2012-ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின்போது, ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையத்தில் வைத்து கைதுசெய்தனர். தேர்வுக்கு முன்னரே அந்தப் பெண் விடைத்தாளைப் பணம் கொடுத்து வாங்கியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

இந்த முறைகேடு விவகாரத்தில், சுமார் 30 பேருக்குத் தொடர்புடையதாக அந்தப் பெண் அப்போதே வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால், இதைக் கேட்டுக்கொண்ட சிபிசிஐடி அதிகாரிகள் தவமணி, சிவகுரு மற்றும் ரவிக்குமார் ஆகிய மூன்று புரோக்கர்களை மட்டுமே கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் கூறிய குற்றவாளிகளில், அப்போதே ஜெயக்குமார் போன்ற பலர் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் குற்றவாளிகள் எனத் தெரிந்தும் அதிகாரிகள் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

`அழியக்கூடிய மை; சிறப்புப்  பேனா; வாழ்நாள் தடை! -எப்படி நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 முறைகேடு?

எனது கட்சிக்காரர் தவமணியைக் கைதுசெய்தால், அனைத்து முறைகேடுகளும் முடிந்துவிடும் எனக் கூறி அவர் கைது செய்யப்பட்டு, தற்போது வரை திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரைக் கைதுசெய்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு, தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன. தவமணி, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்துள்ளார். அவர் வேலைக்குச் சேர்ந்த 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை மட்டும் அவரே சுமார் 800 பேருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி

தவமணி கைதுசெய்யப்பட்டபோது, அவரது வீட்டிலிருந்து மட்டும் ரூ.8 கோடி மதிப்புள்ள பணத்தை சிபிசிஐடி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தவமணி கைதுசெய்யப்பட்ட பிறகு, தன் குற்ற உணர்ச்சியால் சிறை விதிமுறைகளின்படி, சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு நடக்கும் நீதிமன்றம், சிபிசிஐடி போலீஸார் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்கள் பற்றி மனுக்கள் அனுப்பியுள்ளார். ஆனால், இதுவரை அவர்களில் ஒருவர்மீதுகூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தற்போது அரசுத் துறைகளில் மிகப் பெரும் பதவிகளில் உள்ளனர்.

சாதாரண ஓட்டுநராக இருந்த தவமணியிடமிருந்து மட்டுமே அவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தால், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு அரசு அதிகாரிகளிடம் எவ்வளவு பணம் இருக்கும். அவர்கள், பணத்தைப் பெற்றுக்கொண்டு இதுவரை லட்சக்கணக்கானவர்களுக்கு அரசுப் பணிகளைப் பெற்றுக்கொடுத்திருப்பார்கள். தற்போது நடைபெற்றுள்ள முறைகேட்டிலும் இதுவரை ஜெயக்குமார் போன்ற அடிமட்டத்தில் இருப்பவர்களை மட்டுமே கைதுசெய்துள்ளனர். இவை அனைத்தையும் அறிந்தும், உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய சிபிசிஐடி தயக்கம் காட்டுகிறது, அவர்களின் உதவியால் அரசு அதிகாரிகளும் சுதந்திரமாகச் சுற்றிவருகிறார்கள்.

வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்கள்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் காலம் தாழ்த்தி, திசை திருப்பப் பார்க்கிறார்கள் சிபிசிஐடி அதிகாரிகள். எனவே, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அப்போதுதான் இந்த முறைகேட்டில் முக்கியக் குற்றவாளிகளாக உள்ள அரசியல் பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தை எடுத்துவிட்டு, யுபிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தி, அரசுப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு