Published:Updated:

`டிமாண்ட் அதிகம்..!' -காய்கறி மூட்டைகளுக்கிடையில் குட்கா; களியக்காவிளை போலீஸை அதிரவைத்த 5 பேர்

களியக்காவிளையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்
களியக்காவிளையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகள்

காய்கறி வாகனங்கள் மூலம் குட்கா மற்றும் புகையிலைகளை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியப் பொருள்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காய்கறிகளுக்கு இடையே குட்கா மற்றும் புகையிலை போதைப் பொருள்களை மறைத்துவைத்து கடத்தி, விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் குட்கா, புகையிலைகளின் தேவை அதிகமாக இருப்பதாகவும், இதைக் காய்கறி மூட்டைகளுக்கு இடையே பதுக்கி கேரள மாநிலத்துக்கும் கடத்தியது தெரியவந்ததால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்
குட்கா பதுக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது, ``நாடு முழுவதும் 144 தடை உத்தரவு காரணத்தால் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை பகுதியில் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் செல்லும் காய்கறி வாகனங்கள் மூலம் குட்கா புகையிலைப் பொருள்கள் அந்தக் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதுக்கி விற்பனை நடைபெற்று வருவதாக தக்கலை டி.எஸ்.பி ராமச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் களியக்காவிளையில் உள்ள கடைகளில் காவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் ஐந்து கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து குட்கா மற்றும் புகையிலை பதுக்கியதாக அசப், ஷாபி, அஷ்ரப், ரசாக், ரெஜித் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்து களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது பல ஆண்டுகளாக இவர்கள் குட்கா மற்றும் புகையிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும். ஒருபுறம் தமிழக பகுதியாகவும் மறுபுறம் கேரளா பகுதியாகவும் இருந்ததால் இவர்களது கடத்தலுக்கு அது வாய்ப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இப்போது கொரோனா காரணமாக மதுபானக் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் இரண்டு மாநிலங்களிலும் குட்கா, புகையிலை தேவை அதிகரித்து வருவதாகவும், இதனால் சில்லறை வியாபாரிகள் ஐந்து மடங்கு வரை விலை உயர்த்தி விற்பனை செய்வதாகவும். காய்கறி வாகனங்கள் மூலம் குட்கா மற்றும் புகையிலைகளை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு