Published:Updated:

`கன்னத்தில் அறைந்த ஓட்டுநர்; திருப்பி அடித்த சுங்கச்சாவடி பெண் ஊழியர்’ -வைரல் வீடியோ

பிரேம் குமார் எஸ்.கே.

இந்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியில், இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த மாதம் ஒரு பெண் ஊழியர் தாக்கப்பட்டார்.

Screenshot From CCTV Footage
Screenshot From CCTV Footage ( ANI )

ஹரியானா மாநிலம் குருகிராமின் கெர்கி தவ்லா பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி ஒன்றில், பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த இளைஞர் ஒருவர், சுங்கச் சாவடியில் பணம் கட்ட மறுத்து தன்னிடம் இருக்கும் ஐ.டி கார்டை காட்டுகிறார்.

Screenshot From CCTV Footage
Screenshot From CCTV Footage
ANI

அதை வாங்கி ஆய்வுசெய்யும் டோல்கேட் பெண் ஊழியர், 'இந்த ஐ.டி கார்டுக்கு இலவசப் பயணம் கிடையாது' என மறுப்பு தெரிவித்ததுடன் கட்டணத்தை கட்டச் சொல்லியுள்ளார். இதனால் பெண் ஊழியருக்கும் அந்த கார் ஓட்டுநருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில், காரில் இருந்து இறங்கிவந்து வாக்குவாதம் செய்த அந்த ஓட்டுநர், ஆத்திரத்தில் பெண் ஊழியரை கன்னத்தில் அறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் ஊழியரும் திருப்பித் தாக்க, அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சுங்கச்சாவடியில் இருக்கும் மற்ற ஊழியர்கள், இந்த மோதலைத் தடுத்துநிறுத்த முயல்கிறார்கள். ஒருகட்டத்தில், கோபமாக வெளியே வரும் பெண் ஊழியர், தொடர்ந்து அந்த ஓட்டுநரை தாக்க முயல்கிறார்.

இந்த வீடியோ, சமூக வலைதங்களில் வைரலாகப் பரவ, குறிப்பிட்ட அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். விடியோவைக்கொண்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த குறிப்பிட்ட சுங்கச்சாவடியில், இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை கிடையாது. கடந்த மாதம் ஒரு பெண் ஊழியர் தாக்கப்பட்டார். அதற்கு முன், பணம் கட்டாமல் தப்பிக்க முயன்ற காரை தடுக்க முயன்ற ஒரு ஊழியர் காரால் மோதப்பட்டு சிறிது தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

மதுரை டோல்கேட் ஊழியர்களை துப்பாக்கியால் மிரட்டிய ரவுடிகள்! - உசிலம்பட்டி அருகே கைது