Published:Updated:

பார்க்கிங் பிரச்னை; பெண்களை முகம் சுளிக்கவைத்த காவலர்; சர்ச்சையான வீடியோவின் பின்னணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாக்குவாதத்தில் ஈடுபடும் காவலர் கிருஷ்ணகுமார்
வாக்குவாதத்தில் ஈடுபடும் காவலர் கிருஷ்ணகுமார்

சென்னையில் பார்க்கிங் பிரச்னைக்காக, போக்குவரத்துக் காவலர் ஒருவர் செய்த அநாகரிகமான செயல் பெண்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை அம்பத்தூர், ஒரகடம், ஏ.கே.ஏ.நகர், பெரியார் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (48). இவர் கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் முருகன். இவர் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவர், தன்னுடைய டூ வீலரை வீட்டின் அருகிலுள்ள சாலையில் ஓரமாக நிறுத்திவைத்திருந்தார். சாலையில் டூ வீலரை நிறுத்தியது தொடர்பாக காவலர் கிருஷ்ணகுமாருக்கும் முருகனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டுவந்தது.

கார் திருட்டு; சேஸிங்; `சைலேந்திரபாபு சார் 3 முறை போனில் பாராட்டிப் பேசினார்!’ - நெகிழ்ந்த காவலர்
காவலர் கிருஷ்ணகுமார்
காவலர் கிருஷ்ணகுமார்

இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி வழக்கம்போல முருகன், தன்னுடைய பைக்கை சாலை ஓரத்தில் நிறுத்தினார். அதைப் பார்த்த காவலர் கிருஷ்ணகுமார், `பைக்கை இங்கு நிறுத்தாதே’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த காவலர் கிருஷ்ணகுமார், தகாத வார்த்தைகளால் திட்டினார். முருகனுக்கும் கிருஷ்ணகுமாருக்கும் நடந்த சண்டையை அந்தத் தெரு மக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்தச் சமயத்தில் முருகனின் பைக்கைக் காலால் எட்டி உதைத்து கிருஷ்ணகுமார் கீழே தள்ளினார். அப்போது காவலர் கிருஷ்ணகுமாரை சிலர் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவரோ முருகனிடம் தகராறில் ஈடுபட்டார். முருகனுக்கு ஆதரவாக அவரின் குடும்பத்தினரும் கிருஷ்ணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சமயத்தில் டவுசர் அணிந்திருந்த காவலர் கிருஷ்ணகுமார், திடீரென அதைக் கழற்றினார். நிர்வாணமாக நின்றதால் அங்கிருந்த பெண்கள் வீட்டுக்குள் ஓடினர். தெருவில் உள்ளவர்கள் காவலர் கிருஷ்ணகுமாரின் இந்தச் செயலைப் பார்த்து முகம் சுளித்தனர். அதை கவனித்த கிருஷ்ணகுமாரின் குடும்பத்தினர் ஓடி வந்து அவரின் டவுசரைச் சரிசெய்தனர். பின்னர் அதோடு இல்லாமல் அந்தத் தெருவையே ரணகளப்படுத்தினார் கிருஷ்ணகுமார். அவரின் அநாகரிகச் செயலை அந்தப் பகுதியிலுள்ள சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.

காவலர் கிருஷ்ணகுமார்
காவலர் கிருஷ்ணகுமார்

மேலும் வியாபாரி முருகனும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் கிருஷ்ணகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதனால் முருகன், மேற்கு மண்டல இணை கமிஷனரிடம் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்த இணை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸார் வீடியோ அடிப்படையில் காவலர் கிருஷ்ணகுமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

அந்த வீடியோவில் `நான் பொட்ட பய இல்ல' எனக் கூறும் காவலர் கிருஷ்ணகுமார், தான் அணிந்திருந்த டவுசரைக் கழற்றி ஆண் உறுப்பைக் காட்டும் காட்சி பதிவாகியிருக்கிறது. மேலும் பைக்குகளை காவலர் கிருஷ்ணகுமார் காலால் உடைக்கும் காட்சியும் இருக்கிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் ஏற்பாடு செய்துவருகின்றனர். ஆனால், காவலர் கிருஷ்ணகுமாரின் வீடியோ வெளியானதும் முருகன் தரப்பிடம் காவலர் கிருஷ்ணகுமார் தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு