பொருள் மற்றும் உணவு டெலிவரி செய்யும் சில நிறுவனங்கள் `குறைந்த நேரத்தில் பொருள் டெலிவரி செய்யப்படும்' என்று விளம்பரம் செய்துவருகின்றன. இதனால் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த டெலிவரி ஊழியர்கள் குறித்த நேரத்தில் பொருளை டெலிவரி செய்ய வேண்டும் என்று அதிவேகமாக வாகனங்களை இயக்குகிறார்கள்.

`உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிமுறைகளைச் சரிவரப் பின்பற்றுவது கிடையாது’ என்று பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, சென்னைப் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று நடைபெற்ற சிறப்பு வாகன சோதனையில் ஸ்விக்கி, ஸொமேட்டோ, டான்சோ, அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவன டெலிவரி ஊழியர்கள் 978 பேர்மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதில், ஸ்விக்கி நிறுவனத்தைச் சேர்ந்த 450 பேர் மீதும், ஸோமேட்டோவைச் சேர்ந்த 278 பேர் மீதும் டான்சோவைச் சேர்ந்த 188 பேர் மீதும், மற்ற நிறுவனங்களைச் சேர்ந்த 62 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1.35 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.