Published:Updated:

காட்பாடி: ரயிலில் வந்த பார்சல்; தப்பி ஓடிய கடத்தல் கும்பல்! - 42 கிலோ கஞ்சா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திவரப்பட்ட 42 கிலோ கஞ்சா பொட்டலங்களை காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து கேரள மாநிலம் கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில், வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது. அதற்கு முன்புள்ள அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பில் இந்த ரயில் நிற்காது. அதற்கு முந்தைய ரயில் நிறுத்தத்தில் எங்கேயோ மர்ம நபர்கள் சிலர் கஞ்சா பொட்டலங்களை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்துக்கொண்டு ஏறியுள்ளனர். இது குறித்த தகவல் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது. கஞ்சா கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க பாதுகாப்புப் படை போலீஸார், ரயில் நிலையம் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். ரயில் வந்தவுடன், அதில் ஏறி சோதனை செய்தனர்.

காட்பாடி ரயில் நிலையம்
காட்பாடி ரயில் நிலையம்

அப்போது, ஸ்லீப்பிங் பர்த் எஸ்-7 பெட்டியிலிருந்த கஞ்சா கும்பல் தப்பி ஓடிவிட்டது. அவர்கள் விட்டுச் சென்ற நான்கு பைகளை கைப்பற்றியபோது, அதில் கூரியர் பார்சல் போன்ற 24 பண்டல்கள் இருந்தன. அவற்றைப் பிரித்துப் பார்த்தபோது, 42 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த பாதுகாப்புப் படை போலீஸார், வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாரிடம் அதை ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்திய கும்பலைப் பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு