திருப்பத்தூர் அருகேயுள்ள புது பூங்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதே ஆன திருநங்கை சந்திரிகாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் சந்துரு. கடந்த ஓராண்டுக்கு முன்புதான் அவர் திருநங்கையாக மாறுவதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனை அவரது உறவினர்கள் விரும்பவில்லை; வெறுத்து ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு பகுதியிலுள்ள கூத்தாண்டவர் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடந்திருக்கிறது. இந்தத் திருவிழாவில் திருநங்கை சந்திரிகாவும் கலந்துகொண்டிருக்கிறார்.

பின்னர், குரிசிலாப்பட்டு கிராமத்திலுள்ள தனது சித்தி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கு தங்கியிருந்த சந்திரிகா திடீரென மாயமாகியிருக்கிறார். குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை தேடவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குரிசிலாப்பட்டு கிராமத்திலுள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், திருநங்கை சந்திரிகா சடலமாகக் கிடப்பதாக அப்பகுதி மக்கள், குரிசிலாப்பட்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்றும் கிடந்திருக்கிறது. இதனால், திருநங்கை சந்திரிகா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சொல்கிறார்கள்.

சம்பவத்தை அறிந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, சந்திரிகாவின் உறவினர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். ‘சந்திரிகாவின் சாவில் மர்மம் இருக்கிறது. அவரின் உறவினர்கள் மீதே எங்களுக்கு சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று போலீஸாரும் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவத்தால், அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.