தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மனைவி திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே விருதலைபட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் குடும்பத்துடன் அதேபகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தேனி பகுதியில் கஞ்சா வாங்கிவந்து வேடசந்தூர் பகுதியில் நூற்பாலைகளில் பணி செய்துவரும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பொன்னுசாமி கஞ்சா பொட்டலங்கள் விற்பனைசெய்துவருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் கூம்பூர் போலீஸார் பொன்னுசாமியைக் கைதுசெய்ய விரைந்திருக்கின்றனர்.

அப்போது பொன்னுசாமி பதினைந்துக்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டார். இதையடுத்து அவரைக் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெள்ளி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென பொன்னுசாமி பைக்கிலிருந்து குதித்துத் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாகவந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றிவந்த வாகனம் மோதியதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து நடந்த இடம் திண்டுக்கல்-கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதி என்பதால் பலியான பொன்னுசாமியின் சடலத்தை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி வட்டாட்சியர்கள் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை விசாரணை மேற்கொண்டு, போலீஸார் உதவியுடன் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிவந்த ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரைக் கைதுசெய்தனர்.