Published:Updated:

`சித்ரவதை; 3 நாள் பாலியல் வன்கொடுமை; பஞ்சாயத்து'- தெலங்கானா பழங்குடியின தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!

தெலங்கானாவில் கூலி வேலைக்கு சென்ற தம்பதியை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Representation image
Representation image

தெலங்கானாவை சேர்ந்த பழங்குடியின தம்பதி ஹர்ஷாகூடா பகுதிக்கு வேலைத் தேடிச்சென்றனர். அங்குள்ள பண்ணை ஒன்றில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை கிடைத்தது. பிரஷாந்த் ரெட்டி என்பவரின் பண்ணையில் தான் இருவரும் பணியாற்றி வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்னர் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் பிரஷாந்துக்கு சொந்தமான மற்றொரு பண்ணையில் இருந்த வீடு சேதமடைந்தது. வீட்டை சுத்தம் செய்யும் பணிக்காக செப்டம்பர் 18-ம் தேதி பழங்குடியின தம்பதியை பிரஷாந்த் ரெட்டி அழைத்து சென்றுள்ளார்.

Representation image
Representation image

இவர்களுடன் பிரஷாந்தின் நண்பர்கள் நான்கு பேர் சென்றனர். அந்த வீட்டை அடைந்ததும் கணவன் மனைவி இருவரையும் தனித்தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பழங்குடியின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உதவிக்கேட்டு அவர் கூச்சலிட்டுள்ளார். இரும்பு கம்பிகள் மட்டும் பெல்ட்டால் கடுமையாக தாக்கியதுடன் தொடர்ந்து 3 நாள்கள் அந்தப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரது கணவரை மற்றொரு அறையில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். இந்த தம்பதி பண்ணையில் இருந்த கோழிகளுக்கு குறைவான தீவனத்தை கொடுத்தாகவும் சுரேஷ் என்பவருக்கு தீவனத்தை விற்று அதன்மூலம் வருமானம் பார்த்ததாக கூறப்படுகிறது. தீவனத்தை திருடி விற்றதை அந்தப்பெண் ஒப்புக்கொண்ட பின்னர் தான் 3 நாள்கள் கழித்து இருவரையும் விடுவித்துள்ளனர்.

தீவனத்தை வாங்கிய சுரேஷ் என்பவரையும் அந்த பண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் மூன்று பேரையும் கொன்று விடுவேன் என மிரட்டி அவர்களது கிராமத்திற்கு அனுப்பிவிட்டனர். இருந்தாலும் பிரஷாந்த் மற்றும் அவரது நண்பர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் பெரியவர்கள் சிலரின் மூலம் சமாதான முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை மூவருக்கும் வழங்க முடிவு செய்தனர்.

Arrest
Arrest

பழங்குடியின தம்பதிக்கு ஒரு லட்சத்து இரண்டாயிரமும் சுரேஷ் என்பவருக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரமும் வழங்குவதாகும் மீதமிருக்கும் தொகையை பஞ்சாயத்து செய்து வைப்பவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என பேசி முடித்துள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட சிலர் அந்த தம்பதியிடம் சமாதானமாக போகும் படி முதலில் கூறியுள்ளனர். பின்னர் மிரட்டல் தொனியில் காவல்துறையிடம் செல்ல மாட்டோம் என வெத்து காகிதத்தில் கையெழுத்து போடுமாறு இருவரையும் கட்டாயப்படுத்தியுள்ளனர். பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த தம்பதி காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பழங்குடியின தம்பதியை சித்ரவதைப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடத்தல், பாலியல் வன்கொடுமை, தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.