Published:Updated:

`முதுகில் கீறிவிட்டு காலை வெட்ட முயன்றனர்!' - போலீஸை எதிர்த்த பழங்குடியின இளைஞருக்கு நேர்ந்த துயரம்

போலீஸிடம் முறையிடும் உறவினர்கள்
போலீஸிடம் முறையிடும் உறவினர்கள் ( ம.அரவிந்த் )

சில மணிநேரங்கள் கழித்து ஆற்றின் கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மர்மான முறையில் இறந்துகிடந்துள்ளார் மணி.

தஞ்சாவூரில் வழிப்பறி வழக்கு ஒன்றின் விசாரணைக்காகச் சென்ற போலீஸாரில் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நபர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதைத் தற்கொலை என போலீஸ் கூறிவரும் வேளையில், போலீஸ் கொலை செய்துவிட்டது எனப் போராடி வருகின்றனர் சம்பந்தப்பட்டவரின் உறவினர்கள்.

மர்மமான முறையில் இறந்த மணி
மர்மமான முறையில் இறந்த மணி

தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி பொதிகை நகரைச் சேர்ந்தவர் மணி (43). இவரின் மனைவி மலர் (39). பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வழிப்பறி வழக்கு ஒன்றில் கடந்த புதன்கிழமை தனிப்படை போலீஸார் இவரைக் கைது செய்ய சென்றனர். அப்போது கெளதமன் என்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு மணி தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் சில மணிநேரங்கள் கழித்து ஆற்றின் கரையோரம் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மர்மான முறையில் இறந்துகிடந்துள்ளார் மணி.

போலீஸார்தான் மணியைக் கொலை செய்து தூக்கு மாட்டிவிட்டதாகக் கூறி, சி.பி.ஐ, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கின.

தூக்கு மாட்டி இறந்த நிலையில் மணி
தூக்கு மாட்டி இறந்த நிலையில் மணி

மணியின் மனைவி மலரிடம் பேசினோம். ``எங்கு திருட்டு நடந்தாலும் முதல்ல போலீஸ் வந்து எங்க சனங்களைத்தான் விசாரிப்பாங்க. இதே போல 15 நாளுக்கு முன்னாடி எங்க மகன் ரஞ்சித் மீது திருட்டு வழக்கு பதிந்து விசாரணைக்கு அழைச்சிகிட்டு போனாங்க. அதன்பிறகு கடந்த புதன்கிழமை என் கணவர் உறவினர் வீட்டில் இருந்தார்.

அப்போது போலீஸ் உடை அணியாமல் வந்த சுமார் 15 போலீஸார் முதலில் செல்வம் என்பவரை பிடித்தனர். பின்னர், என் கணவர் மணியை பிடித்தபோது, `யார் சார் நீங்க... என்னை எதுக்கு பிடிக்கிறீங்க?' எனக் கேட்டார். `நாங்க போலீஸ்... ஒழுங்கா வா?' என மிரட்டியவர்களிடம் `நான் என்ன தவறு செய்தேன்... ஏன் சார் என்னை அடிக்கடி பிடித்து சித்ரவதை செய்றீங்க?' எனக் கேட்டார்.

போலீஸ்
போலீஸ்

அதைக் காதில் வாங்காத போலீஸ் இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்தனர். அப்போது அருகில் ஒருவர் சிறிய அரிவாளை கொண்டு ஈச்சங்கூடை பின்னிக்கொண்டிருந்தார். அந்த அரிவாளை எடுத்த போலீஸ் அவரின் முதுகில் கீறி இருசக்கர வாகனத்தில் நடுவில் உட்கார வைத்து வண்டியை எடுத்தனர். அப்போது பின்னால் உட்கார்ந்திருந்த போலீஸ்காரர், மணியின் காலை வெட்ட முயன்றுள்ளார். இதில் தவறுதலாக வண்டியை ஓட்டிய போலீஸ்காரரின் காலில் வெட்டு விழுந்துவிட்டது.

அதன்பிறகு அந்த இரண்டு போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட மணி தப்பித்து ஓடிவிட்டார். அதன் பிறகு சில மணிநேரங்கள் கழித்து மரத்தில் தூக்கு மாட்டியபடி மர்மமான முறையில் என் கணவர் இறந்துள்ளார். இதையறிந்த நாங்க பதறித் துடித்து அந்த இடத்துக்கு ஓடினோம். போலீஸுக்கும் தகவல் கொடுத்தோம். ஆனால், மாலை 6 மணி அளவில்தான் உடலை எடுத்துட்டுப் போக போலீஸ் வந்தாங்க.

உறவினர்கள்
உறவினர்கள்

என் கணவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை போலீஸ்தான் அவரை கொலை செய்துள்ளனர். என் கணவரின் கால்கள் தரையில் நிற்கும் நிலையில்தான் இருந்தன. தூக்கு மாட்டிக் கொள்ளும்போது கால்கள் துடிக்கும் அப்படியிருந்தால் அது அந்த இடத்தின் தரையில் கால்கள் இழுத்ததால் ஏற்படும் கோடுகள் இருக்கும். ஆனால், அது போன்ற எதுவும் இல்லை. அத்துடன் உடலில் காயங்கள் இருந்தன. இதுபோல் பல மர்மங்கள் என் கணவரின் சாவில் ஏற்பட்டுள்ளது.

`போலீஸ் டார்ச்சர் தாங்க முடியல..!' - டாஸ்மாக் எம்.டி-யிடம் புகார் வாசித்த ஊழியர்கள்

இதில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். போலீஸாரால் நாங்க தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம். திருட்டு வழக்கில் போலீஸ் எங்க சனங்களைக் குறி வைச்சு செயல்படுறாங்க. அதனால் இப்ப அநியாயமாக ஒரு உசுரு போய்விட்டது. இதற்கு போலீஸ் பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்" என்றார் கண்ணீருடன்.

வெட்டுப்பட்ட போலீஸ்
வெட்டுப்பட்ட போலீஸ்

இந்த விவகாரம் குறித்துப் பேசும் போலீஸாரோ, ``மணிதான் போலீஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். அதன் பிறகு தூக்கு மாட்டிய நிலையில் இறந்துள்ளார். இதை சந்தேக மரணமாகத்தான் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறோம்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு